Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 20

நோய்களைத் தடுக்கும் காவல்வீரன் – திப்பிலி

நீண்டு வளரும் காய்கள்… காரம் கொஞ்சம் அதிகம்… கூடவே மருத்துவக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை
- அதுதான் திப்பிலி. `அஞ்சறைப் பெட்டி’யில் குடியிருக்கும் நோய் தடுக்கும் காவல்வீரன்!

கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே கிரேக்கர்கள் திப்பிலியை அதிகம் பயன்படுத்தியிருக்கின்றனர்.


நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தென்னிந்தியா விலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட முக்கியமான
நறுமணமூட்டி திப்பிலி. 

மருத்துவக் குணம் நிறைந்த திப்பிலியின் பிறப்பிடம் இந்தியா என்பதால் நாம் பெருமை கொள்ளலாம்.
பீகாரின் ‘மகத நாடு’ பகுதிகளில் திப்பிலி அதிகமாக விளைந்ததால், பழைய நூல்களில் ‘மகதி’ என்றே
குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் விளைந்தாலும், மேற்குத்தொடர்ச்சி
மலைக்காடுகளில்தான் திப்பிலிக் கொடிகள் மிகவும் வீரியமாக வளர்கின்றன. மழைவளம் மிக்க சிரபுஞ்சி
பகுதிகளிலும் அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. 

கனை, செளண்டி, கலினி, பிப்பிலி, அம்பு, ஆதிமருந்து, வைதேகி, சரம், குடாரி, உண்சரம், உலவைநாசி,
சாடி, பாணம் எனப் பல்வேறு காரணப் பெயர்களையும் வழக்குப் பெயர்களையும் கொண்ட திப்பிலி,
உடலில் வெப்பத்தை உண்டாக்கி, கபத்தை அறுக்கும். உடலில் உண்டாகும் வாய்வை அகற்றி, செரிமான
உறுப்புகளைச் சுறுசுறுப்பாக்கும்.

திப்பிலிக் காய்கள் பச்சையாக இருக்கும் போது குளிர்ச்சியையும், உலர்ந்ததும் வெப்பத்தையும்


கொடுக்கும் என்கிறது சித்த மருத்துவம். ‘ஈளை யிருமல் இரைப்பு பசப்பிணிகள்… நாசிவிழி காதிவை
நோய் நாட்புழுநோய்…’ எனத் திப்பிலி சார்ந்து பாடப்பட்டுள்ள தேரையரின் பாடல்கள், இருமல்,
இரைப்பு, சுவையின்மை, மயக்கம், தலைவலி, தொண்டை நோய் போன்ற பல நோய்களுக்குத் திப்பிலி
எதிரி என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

திப்பிலியின் வேர்களுக்கு `திப்பிலி மூலம்’ என்று பெயர். காம உணர்வைத் தூண்டுவதுடன் சிறுநீர்ப்
பெருக்கி செய்கைகளும் இந்த வேருக்கு உண்டு. திப்பிலி வேரிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கும்
மருத்துவக் குணங்கள் அதிகம். நாக்பூர் பகுதியில் பானங்களை நொதிக்க வைப்பதற்காக இதன் வேர்கள்
பயன்படுத்தப்படுகின்றன. 

பைப்பெரின், பைப்லார்டின், சில்வடின், பைப்பர்மொனாலின், பிராகிஸ்டைன் என நோய் நீக்கும் தாவர


வேதிப்பொருள்கள் திப்பிலியின் காய்கள் மற்றும் வேர்களில் இருக்கின்றன. அழற்சி மற்றும் வீக்கம்
உண்டாக்கும் காரணிகளின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, உடலில் தோன்றும் வலி,
வீக்கத்தைத் திப்பிலி தடுப்பதாக ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. புற்று செல்களுக்கு எதிராகவும்
திப்பிலியின் மூலக்கூறுகள் செயல்படுகின்றன. ஆரம்பநிலை கல்லீரல் பாதிப்பின்போது, செல்களின் மறு
உருவாக்கத்துக்கும் திப்பிலி துணை நிற்கிறதாம். உணவின் சாரங்கள் மற்றும் மருந்துகளின்
உட்கிரகித்தலை அதிகரிக்கவும் திப்பிலி உதவும். 

நுரையீரல் பாதைத் தொற்றுகளை அழிக்கும் சக்தி திப்பிலிக்கு உண்டு. கோழையை வெளியேற்றும்


செய்கை இருப்பதால், `கோழையறுக்கி’ என்னும் பெயரைச் சுமக்கும் திப்பிலி, ஆஸ்துமாவுக்கான சிறந்த
மருந்து. தொண்டைக் கரகரப்பும், இருமலும் அதிகரிக்கும்போது மூன்று விரல் அளவு திப்பிலிப்
பொடியை வெற்றிலையில் வைத்துக் கடித்துச் சாப்பிட்டால் உடனடியாக வித்தியாசம் தெரியும்.
அக்ரகாரம், மிளகு, அதிமதுரம், திப்பிலி போன்றவற்றைச் சேர்த்து உருவாக்கப்படும் லேகியம்,
கடுமையான தொண்டைக்கட்டையும் விரைந்து குணப்படுத்தும்.

வெற்றிலை மெல்வதைப்போன்று, இதன் இலைகளை மென்று சாப்பிடும் வழக்கம் அந்தமான் தீவுகளில்


உள்ளது. காரம் சற்றுத் தூக்கலாக இருப்பதால், தென்னிந்திய உணவுகளில் மிளகுக்குப் பதிலாகத்
திப்பிலியைச் சேர்க்கும் வழக்கமும் முன்பு இருந்திருக்கிறது. நாவில்பட்டதும் உமிழ்நீர்ச் சுரப்பை
அதிகரித்து, செரிமானத்தைச் சிறப்பாகத் தொடங்கிவைக்கும். உடலில் தோன்றும் தடிப்புகளுக்கு,
திப்பிலிப்பொடியை மஞ்சள் மற்றும் துளசி இலைகளுடன் சேர்த்து அரைத்துப் பூசலாம். திப்பிலியுடன்
நல்லெண்ணெய் சேர்த்து வலி, வீக்கம் உள்ள பகுதிகளில் தேய்த்தால் நிவாரணம் கிடைக்கும்.

தேமலை நீக்க, திப்பிலியைப் பொடியைத் தேனில் கலந்து ஒரு மாதம் சாப்பிடச் சொல்கிறது தேரன்
காப்பியம் நூல். திப்பிலிப் பொடியை நெய்யுடன் சேர்த்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
நீர்த்துப்போன விந்தைக் கெட்டிப்படுத்த, அஞ்சறைப்பெட்டிக்குள் இருக்க வேண்டிய முக்கியமான
மூலப்பொருள் திப்பிலி. திரிகடுகு சூரணத்தின் மருத்துவக் குணத்துக்குச் சுக்கு, மிளகுடன் சேர்ந்து
அதிலிருக்கும் திப்பிலியும் மிக முக்கியக் காரணமாகும். மிளகைவிட அதிக காரத்தன்மை கொண்டது.
சோர்வாக இருக்கும்போது, வெந்நீர் அல்லது தேநீரில் சிறிது திப்பிலிப் பொடியைச் சேர்த்துக்
குடிக்கலாம். 

வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய்ப் பிரச்னைக்கு, திப்பிலிப் பொடியுடன் தேற்றான்கொட்டைப்பொடி,


பனைவெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம். பிரசவத்துக்குப் பிறகு கருப்பையில் உள்ள அழுக்குகளை
வெளியேற்றவும் திப்பிலி உதவும்.

வாதசுரக் குடிநீர், குமரி நெய், திப்பிலி ரசாயனம் என நிறைய மருந்து வகைகளிலும் திப்பிலி
சேர்க்கப்படுகிறது. நாள்பட்ட கபநோய்களை அழிப்பதற்கான வீரியம், திப்பிலி ரசாயனத்துக்கு உண்டு.
தனியா, மஞ்சள், மிளகாய் சேர்த்துக் குழம்புப் பொடி அரைக்கும்போது, இனிமேல் கொஞ்சம்
திப்பிலியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குழம்புப் பொடி, மருந்துப் பொடியாக உருமாறும். 

திப்பிலி, மிளகு மற்றும் இஞ்சியை அரைத்து, இறைச்சித் துண்டுகளின் உள்ளும் புறமும் தடவிச்
சமைக்கும் அசைவ உணவுக்கு மருத்துவக் குணங்கள் அதிகம் என மருத்துவ நூல்கள் பதிவு
செய்துள்ளன. திப்பிலி, மிளகு, மஞ்சள், திராட்சை ரசம், தேன் மற்றும் அரிசியுடன் தண்ணீர் சேர்த்து
நொதிக்க வைத்த பானம், பண்டைய காலங்களில் மருந்தாக அதிகளவில் பருகப்பட்டுள்ளது. திப்பிலி,
இஞ்சி, ஏலம், வெண்ணெய், நெய், ஆட்டுப்பால், கசகசா, பேரீச்சை, கொண்டைக்கடலை, பாதாம், அத்தி,
தேனுடன் சேர்த்து அரைத்துத் தயாரிக்கப்படும் உணவு ஆண்மைக்குறைவைப் போக்குவதாக முகலாய
நூல்களில் குறிப்பிட்டுள்ளன. 

குளிர்காலங்களில் மிளகு ரசம் வைப்பதைப்போல, திப்பிலி ரசத்தையும் துணைக்கு அழைக்கலாம்.


திப்பிலி ரசமானது, நுரையீரல் பாதையைத் தெளிவாக்கி, உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு
சக்தியையும் வெப்பத்தையும் கொடுக்கும்.  

குளிர்காலமோ, மழைக்காலமோ அச்சப்பட வேண்டியதில்லை… திப்பிலி எனும் காவல்வீரனை


உணவுகளில் முன் நிறுத்துங்கள் போதும்!

இருமல் சூரணம் 

ஓமம், சுக்கு, மிளகு, திப்பிலி, கடுக்காய்த் தோல், அக்ரகாரம்ச், சித்தரத்தைச் சம அளவு  எடுத்து அரைத்து
நாட்டுச் சர்க்கரை சேர்க்க வேண்டும். அதில் ஐந்து சிட்டிகை அளவு வாயில் அடக்கிக்கொண்டால்,
கோழை வெளியேறி வறட்டு இருமல் அடங்கும்.

விக்கல் சூரணம் 

எட்டு பங்கு திப்பிலி, பத்து பங்கு சீரகத்தை அரைத்து வைத்துக்கொண்டு, சிறிதளவு தேனில் குழைத்துச்
சாப்பிட்டால் விக்கல் அடங்கும்.

யவகு (Yavagu) 

அரிசி அல்லது பார்லி கஞ்சியில் திப்பிலி, நெய் கலந்து செய்யப்படும் `யவகு’ என்னும் கஞ்சி வகை,
பசியை அதிகரித்து, உணவின் சாரங்களை முழுமையாக உறிஞ்சப் பயன்படுகிறது. இந்தியாவின் மேற்குப்
பகுதிகளில் இப்போதும் `யவகு’ பிரபலம். காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவாகவும்
இதைப் பயன்படுத்தலாம். 

சட்டகா (Sattaka) தயிருடன் பனங்கற்கண்டு, சுக்கு, திப்பிலி, மிளகு சேர்த்து மெல்லிய துணியில் வடிகட்டி,
அதில் மாதுளை விதைகளைத் தூவிச் சாப்பிடும் சுவைமிக்க நொறுவை நம்மிடையே வழக்கத்தில்
இருந்திருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அஞ்சறைப் பெட்டியில் `தனித்துவமான ஒருவன்’ பூண்டு

`சன்னியோடு வாதம் தலைநோவு…’ எனத் தொடங்குகிறது பூண்டு சார்ந்த அகத்தியர் குணவாகடப்


பாடல். காது நோய்கள், இருமல், தலைவலி, மூலம், வாத நோய்கள் போன்றவற்றுக்கு பூண்டு மருந்தாகச்
செயல்படுகிறது என்பதை எடுத்துக்கூறுகிறது இந்தப் பாடல். மெல்லிய தேகத்தை உரித்ததும் பலவித
மருத்துவக் குணமிக்க இயற்கை நுண்கூறுகளுடன் நம்மைப் பார்த்துப் புன்னகைக்கும் பூண்டு, மருத்துவ
உலகின் உச்சாணி. 

ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து இந்தியாவுக்குள் பூண்டு நுழைந்ததாக வரலாறு பேசுகிறது. கி.மு 3000


ஆண்டுக்கால எகிப்திய கல்லறைகளில், பூண்டின் களிமண் படிவங்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.
இரண்டாம் உலகப்போரின்போது, ரஷ்யப் போர் வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்குக் கிருமிநாசினி
செய்கையுடைய பூண்டு அதிகப் பலன் தந்தது. இதன் காரணமாக அப்போது, ‘ரஷ்யாவின் பென்சிலின்’
என்று பூண்டுக்குப் பெயர் சூட்டப்பட்டது. இலசுனம், உள்ளி, வெள்வெங்காயம் போன்ற வேறு
பெயர்களும் இதற்கு உண்டு.

5000 ஆண்டுகளுக்கு முன்பே `இதயத்தை வலுவாக்கும் பூண்டு’ எனும் மருத்துவக் குறிப்பு


காணப்படுகிறது. எகிப்து, சீனா, கிரேக்கம் மற்றும் இந்தியாவின் பழைமையான மருத்துவ நூல்களில்
பூண்டின் பெருமைகள் பேசப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்கத்தில், ஒலிம்பிக் போட்டியாளர்களின்
செயல்திறனை அதிகரிக்க, வீரர்களின் மெனுவில் பூண்டு இடம்பிடித்திருக்கிறது. 

பூண்டு, துளசி, ஆலிவ் எண்ணெய் சேர்த்துச் செய்யப்படும் `பெஸ்டோ’ சாஸ், இத்தாலி நாட்டில்
புழக்கத்திலிருக்கிறது. பூண்டு, கொண்டைக் கடலை, ஆலிவ் எண்ணெய் மற்றும் சில கொட்டை
வகைகளைக்கொண்டு தயாரிக்கப்படும் சுவைமிக்க உணவுக்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் `ஹம்மஸ்’
என்று பெயர். அமெரிக்காவில் உள்ள `தி ஸ்டிங்கிங் ரோஸ்’ உணவகத்தின் அனைத்து உணவு
வகைகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டு ஐஸ்க்ரீம் அந்த உணவகத்தின் சிறப்பு. 
பூண்டின் வாசனைக்கும் குணத்துக்கும் அதிலிருக்கும் `அல்லிசின்’, ‘அல்லிசாடின்’ ஆகிய பொருள்களே
காரணம். போலந்து நாட்டில் நடைபெற்ற ஆய்வின் முடிவில், பூண்டின் சத்துகள் உயர் ரத்த
அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, டி.என்.ஏ-வுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் தடுப்பது தெரியவந்தது.
அதிக ரத்தம் உறைதலைத் தடுப்பதுடன் ரத்தக் குழாய்களில் உருவாகும் கொழுப்புப் படிமங்களைச்
சிதைத்து மாரடைப்போ, பக்கவாதமோ ஏற்படாத வகையில் பூண்டு பார்த்துக்கொள்ளும். சருமத்துக்கு
ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தேகத்துக்குப் பொலிவைக் கொடுக்கவும் பூண்டு உதவும்.  

பெருங்குடல் புற்றுநோய் செல்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் அளவை பூண்டு பெருமளவில்


குறைத்ததாக `ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன்’ இதழில் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. பூண்டு,
புற்றுநோய் செல்களை அழிக்கும் நொதிகளைச் சுரக்கச் செய்வதுடன், செல்களுக்குப் பாதிப்பை
உண்டாக்கும் ஃப்ரீ-ரேடிக்கல்ஸை உடலிலிருந்து வெளியேற்றுகிறது. கிருமிகளை எதிர்த்துப் போராடும்
லிம்போசைட்டுகள் மற்றும் மேக்ரோஃபேஜ்களின் செயல்திறனையும் பூண்டு அதிகரிக்கும்.  

குடலின் அசைவுத் தன்மையை அதிகரித்து, மந்தமான செரிமானத்தைத் துரிதப்படுத்தும். செரிமான


சுரப்புகளை முறைப்படுத்தி, உடலுக்கு வலுவைக் கொடுக்கும். குடல்பகுதியில் இருக்கும் தீமை செய்யும்
பாக்டீரியாக்களை மட்டும் அழிக்கும். முதியவர்கள் பூண்டினை உணவில் அதிகமாகச் சேர்த்துவந்தால்,
இரட்டைப் பயனாக இதய நோய்களுடன் சேர்த்து, மூட்டுவலிகளும் வராமல் பார்த்துக்கொள்ளும்
என்கிறது ஆய்வு. 

வாய்வகற்றி, பசித்தூண்டி, கோழைய கற்றி, புழுக்கொல்லி, வெப்பமுண்டாக்கி எனப் பன்முகத்தன்மை


கொண்ட பூண்டு, மருந்தாக மட்டுமல்லாமல் உணவாகவும் இருந்துவருகிறது. 

வேகவைத்த சாதத்துடன் நெய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்துச் சமைக்கப்படும் `கட்டோகாரா’ எனப்படும்
உணவு ரகம், பத்தாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் மிகவும் பிரபலம். அரைத்த பூண்டுப் பற்களை
திராட்சை ரசம் அல்லது பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் பருகும் வழக்கம்
நெடுங்காலமாக இருந்திருக்கிறது. 

முளைவிட்ட பூண்டைப் பயன்படுத்தக் கூடாது. கசப்புத் தன்மை அதிகரிக்கும் என்பதால் அது


சமையலுக்கு உகந்ததல்ல. சமைத்து முடித்ததும் கைகளிலிருக்கும் பூண்டின் மணத்தைப் போக்க,
எலுமிச்சைச்சாறு கலந்த நீரில் கைகளைக் கழுவலாம். பூண்டினை நீண்ட நேரம் வறுத்தாலும் கசப்புத்
தன்மை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இறைச்சிகளில் சிறு துளைகள் போட்டு அதற்குள் பூண்டுப்
பற்களைப் புதைத்து வேகவைத்துச் சமைக்க, அசைவ உணவுகளின் சுவை அதிகரிக்கும். உணவுக்
கலன்களில் பூண்டினைத் தடவிய பிறகு உணவுப் பொருள்களை வைத்தால் அதன் சுவை கூடும்.
பச்சையாகப் பூண்டினைச் சாப்பிட்டால் வயிற்றுப் புண்கள் ஏற்படக்கூடும்.

பூண்டு சாண்ட்விச்: பிரெட்டில் லேசாக வெண்ணெய் தடவி, அதற்குள் வேகவைத்துத் துருவிய


பூண்டைத் தூவி தக்காளி, வெங்காயம், கேரட், முட்டைகோஸ் சேர்க்க வேண்டும். அதன்மேல் பிரெட்டைக்
கொண்டு மூடி ஆரோக்கியமான சாண்ட்விச்சாகக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
பூண்டுக் கத்திரிக்காய்: கத்திரிக்காயை நீளவாக்கில் சீவி, அதற்குள் பூண்டுப் பற்களைப் புதைத்து,
கொத்தமல்லித்தூள், சுக்குத்தூள் தூவி கொஞ்சம் நெய்விட்டு வதக்கிச் சாப்பிடும் வழக்கம் மேற்கிந்தியத்
தீவுகளில் காணப்படுகிறது.

அடோபோ: தலா இரண்டு டீஸ்பூன் மிளகு மற்றும் சீரகத்தை மிதமாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
அந்தக் கலவையுடன் உலர்ந்த கொத்தமல்லி இலைகள், இரண்டு டீஸ்பூன் பூண்டுப்பொடி, இரண்டு
டீஸ்பூன் உப்பு மற்றும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக அரைத்தால் `அடோபோ’ எனப்படும்
பொடி தயார். கியூபா நாட்டு உணவுகளில் பயன்படுத்தப்படும் இந்தப் பொடி, பெரும்பாலான உணவு
மேஜைகளில் காணப்படுகிறது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நறுமணமூட்டிகளில் தங்கம் - மஞ்சள்

`ஏழைகளின் குங்குமப்பூ’ என்று அழைக்கப்படுகிறது மஞ்சள். இதன் நிறமும் குணமுமே இத்தகைய


பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது. பிரத்யேகமான நெடியும் மற்ற நறுமணமூட்டிகளிலிருந்து மாறுபட்ட
சுவையும் கொண்டது மஞ்சள். `நறுமணமூட்டிகளில் தங்கம்’ எனப் பெயர் சூட்டுமளவுக்கு மஞ்சளுக்கு
மகத்துவம் அதிகம். `காய்க்கமுகின் கமழ் மஞ்சள்…’ எனும் பட்டினப்பாலை வரிகள், சோழ நாட்டில்
மஞ்சள் விளைச்சல் பற்றிப் பெருமை பேசுகிறது.

திருவிழாக்கள், சடங்குகள், அழகியல், மருத்துவம், சமையல் என நமது உணர் வோடும் உணவோடும்


நெருக்கமான உறவுகொண்டிருக்கும் மஞ்சள், நோய்களைத் தடுப்பதில் மிகச்சிறந்த `இயற்கைக் காவலன்’.
ஜப்பான் மற்றும் சீன மருத்துவ நூல்களில் மஞ்சளின் சிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஞ்சளை
`மஞ்சள் இஞ்சி’ என்றே சீனர்கள் அழைக்கின்றனர்.

மஞ்சளும் குங்குமப்பூவும் கலந்து செய்யப்படும் `ஹரிரா’ (Harira) எனும் `சூப்' ரகத்தை மொராக்கோ
நாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்படும் மஞ்சள் நிற
கேக் லெபனான் நாட்டில் பிரசித்திபெற்ற சிற்றுண்டியாகும். மத்தியக் கிழக்கு நாடுகளில் அசைவ
உணவுகளுக்குச் சுவையூட்டப் பயன்படும் `செர்மவுலா’ (Chermoula) எனப்படும் மசாலா வகையில்
மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிறது. தேநீருடன் மஞ்சள் கலந்து பருகும் வழக்கம் ஜப்பானியர்களிடம்
இருக்கிறது. 

நிசி, பீதம், அரிசனம், கான்சனி ஆகிய பெயர்களைக்கொண்ட மஞ்சளுக்கு வாய்வகற்றி, மணமூட்டி,


ஈரல்தேற்றி, கிருமிநாசினி போன்ற செய்கைகள் இருக்கின்றன. கலப்படமில்லாத மஞ்சளை நீர்விட்டு
அரைத்துக் குளித்தால், தேகம் பொலிவுபெறுவதுடன் வியர்வை நாற்றம் மற்றும் கபநோய்கள் நீங்கும்.
கடந்த தலைமுறையில், மேல்நாடுகளைவிட நமது நாட்டில் தொற்றா நோய்களும் நாள்பட்ட நோய்களும்
மிகவும் குறைவாக இருந்ததற்கு, சமையலில் அதிக அளவில் சேர்க்கப்பட்ட மஞ்சளும் ஒரு முக்கியக்
காரணம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செரிமானத்தின்போது தானியங்கள், பருப்பு வகைகளில் உள்ள புரதங்களை எளிதாகக் கிரகிக்க மஞ்சள்


உதவுகிறது. மஞ்சள் சேர்த்துத் தாளிப்பது, மற்ற நறுமணமூட்டிகளின் மருத்துவக் குணங்களை
வெளிக்கொண்டுவரப் பயன்படுகிறது. இறைச்சிகளை மஞ்சள் நீரில் ஊறவைத்தே சமைத்ததாக 12-ம்
நூற்றாண்டைச் சார்ந்த நூல்களில் பதிவிடப்பட்டுள்ளன. 

புற்றுநோய், நீரிழிவு, இதயநோய் எனப் பல நோய்கள் வராமல் தடுக்க உதவும் மஞ்சளின் மருத்துவச்
செயல்பாட்டுக்கு இதிலுள்ள ‘குர்குமின்’ (Curcumin) எனும் வேதிப்பொருள்தான் காரணம். உடலில்
வீக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகளைக் கட்டுப்படுத்துவதால், மூட்டுவலி உண்டாகாமல்
பார்த்துக்கொள்ளும். ரத்தக்குழாய்களில் ஏற்படும் காயத்தைக் குணப்படுத்துவதில் தொடங்கி மருந்துகளின்
செயல்திறனை அதிகரிப்பது, மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகளைத் தடுப்பது என மஞ்சளின்
தன்மை தனித்துவமானது. பித்த நீரை முறையாகச் சுரக்கச் செய்து, செரிமானப் பிரச்னைகளைச்
சீர்செய்யக்கூடியது.

புற்றுநோய் சார்ந்த மரபணுக்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, ஆரோக்கியமான செல்கள் புற்றுச்


செல்களாக மாற்றமடைவதைத் தடுப்பது, புற்றுச் செல்களின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது, பிற
உறுப்புகளுக்குப் புற்றுநோய் பரவுவதை நிறுத்துவது எனப் புற்றுநோயின் தீமை தரும் பரிமாணங்களைத்
தடுக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு இருக்கிறது.

மஞ்சளின் நோய் தீர்க்கும் குணத்தை அதிகரிக்க, மஞ்சளுடன் அதிக அளவில் மிளகு சேர்த்துச்
சமைக்கலாம். மஞ்சளின் `குர்குமின்’ மிளகில் உள்ள `பைப்பெரின்’ என்ற ஆல்கலாய்டுடன் கூட்டுச்
சேர்ந்து நோய்களை எதிர்த்துப் போராடும். குடல்பகுதியில் `குர்குமின்’ உறிஞ்சப்படும் வேகத்தை
அதிகரிக்க `பைப்பெரின்’ உதவுகிறது. சளி, இருமல் இருக்கும்போது பாலுடன் மஞ்சள், மிளகுத்தூள்
சேர்த்து அருந்தும் அறிவியல் பின்னணி இதுதான். வெங்காயத்தில் உள்ள தாவர வேதிப்பொருள்களும்
மஞ்சளின் குர்குமினும் வினைபுரிந்து, நோய்களின் வீரியத்தைத் தடுக்கின்றன. 

`மஞ்சள் வளையம்’ என அழைக்கப்படும் தமிழகத்தின் கொங்கு மண்டலம், மேற்கு வங்கம்,


மகாராஷ்டிரா, ஆந்திரா எனப் பல பகுதிகளில் மஞ்சள் விளைச்சல் அதிகம். ஆனாலும் கேரளத்தின்
ஆலப்புழா மஞ்சளில் `குர்குமின்’ அளவீடு அதிகம் என்பதால், நிறத்
திலும் மருத்துவக் குணத்திலும் மற்ற பகுதி மஞ்சளைவிட உயர்தரமாகக் கருதப்படுகிறது. 

உடலில் தோன்றும் தேவையற்ற முடிகளை நீக்க மஞ்சள், குப்பைமேனி, வேப்பிலை சேர்த்து அரைத்துப்
பூசலாம். மஞ்சள், பால், பச்சைப்பயறு மாவு, அரைத்த சந்தனம் சேர்ந்த கலவை சிறந்த முகப்பூச்சுக்
கலவையாகும். குழந்தைகளைக் குளிப்பாட்ட மஞ்சள் பயன்பட்டதாக இலக்கியங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளன. 
சுண்ணாம்புத்தூள், மரத்தூள், மாவுப் பொருள் ஆகியவை மஞ்சளில் சேர்க்கப்படும் கலப்படப்
பொருள்களாகும். முற்காலத்தில் இயற்கைச் சாயம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட மஞ்சளில்,
இப்போது தீமை விளைவிக்கும் `லெட்-குரோமேட்’, `மெடானில் யெல்லோ’ போன்ற செயற்கைச்
சாயங்கள் கலக்கப்படுகின்றன. நேரடியாக மஞ்சள் கிழங்குகளை வாங்கி உலரவைத்துப் பயன்படுத்துவதே
சிறந்தது.

கிருமிநாசினிச் செய்கை உடையதால், புண்களுக்கான முதலுதவி மருந்தாக மஞ்சள் இருந்திருக்கிறது.


மலைவாழ் மக்கள், உடலில் அட்டைப்பூச்சிகள் கடித்தால், அது தன் பிடியைத் தளர்த்த மஞ்சள் தூளைத்
தூவு கின்றனர். மஞ்சளை நெருப்பிலிட்டு, அதன் புகையைச் சுவாசித்தால் தலைபாரம், தலைநீரேற்றம்
குறையும்.   

மஞ்சள், நமது கலாசாரத்தின் பசுமையான சின்னம்!

மஞ்சள் ரெசிப்பிகள்

விண்டலூ (Vindaloo) கறி மசாலா 

நான்கு டீஸ்பூன் பொடித்த சீரகம், தலா இரண்டு டீஸ்பூன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள்,
மிளகாய்த்தூள், இஞ்சி விழுது, கடுகுத்தூளுடன் உப்பு சேர்க்க வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்திலிட்டு
அரை கப் வினிகர் ஊற்றி வெண்ணெய்ப் பதம் வரும் வரை கலக்க வேண்டும். ஒரு சட்டியில்
நல்லெண்ணெய் ஊற்றி, மேலே சொன்ன கலவையைச் சேர்த்து, 10 நிமிடங்கள் சிறு தீயில் எரியூட்டினால்
மணமும் நெடியும் சேர்ந்த மசாலா தயார். காரமும் விறுவிறுப்பும் கலந்த அசைவ உணவுகள் தயாரிக்க
இதைப் பயன்படுத்தலாம். ஆந்திரா மற்றும் கோவாவில் இந்த மசாலா வகை புழக்கத்தில் இருக்கிறது. 

பதோயோ (Pathoyo/Patoleo)

மஞ்சள்கிழங்கு மட்டுமல்ல; இலைகளும் உணவாகப் பயன்படுகின்றன. அரிசி மாவை நீரில் கரைத்து


மஞ்சள் இலையில் தடவ வேண்டும். அதன்மீது கருப்பட்டிக் கரைசல், தேங்காய்த் துருவல், சிறிது
ஏலக்காய்த்தூள், லவங்கப்பட்டைத்தூள் தடவி மஞ்சள் இலையால் மூட வேண்டும். பிறகு ஆவியில் வேக
வைத்தால், `பதோயோ’ தயார். மஞ்சள் இலைகளின் மணம் கமழும் இந்த உணவு, கோவா பகுதியின்
தனிச்சிறப்பு. 

மஞ்சள் ஊறுகாய்

250 கிராம் பசுமையான மஞ்சள்கிழங்கை மையாக அரைத்து, அதனுடன் நான்கு எலுமிச்சைப்


பழங்களிலிருந்து எடுத்த சாறு, ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். மஞ்சள் கிழங்கு
அதிக அளவில் உற்பத்தியாகும் மார்கழி, தை மாதங்களில் மஞ்சள் ஊறுகாயைத் தயாரித்து,
அப்போதைய பனிக்காலத்தில் பயன்படுத்தினால் சளி, இருமல் எட்டிப்பார்க்காது. 

மஞ்சள் மிட்டாய்

பசுமையான மஞ்சள்கிழங்கை கத்தியால் மெல்லியதாகச் சீவ வேண்டும். ஒரு பானையில் நீர் ஊற்றி,
அதில் மஞ்சளைப் போட்டு, சிறுதீயில் 10 நிமி டங்கள் கொதிக்கவைக்க வேண்டும். பிறகு கருப்பட்டி
கரைத்த தண்ணீரைத் தனிப்பானையில் ஊற்றி, மேலே சொன்ன வெந்த மஞ்சள் சீவல்களையும் அதில்
போட்டு வேகவைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, சூடு ஆறியதும் சுவைக்கலாம். 

 விடலபாகா’ (Vidalapaka)

பயத்தம்பருப்பு, துவரம்பருப்பு, மசூர் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு மாவுகளுடன் மஞ்சள்,


பெருங்காயம், உப்பு சேர்த்துச் சமைக்கப்படும் சிற்றுண்டி வகையான `விடலபாகா’, பல
நூற்றாண்டுகளுக்கு முன்பு பிரசித்தமானது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------

மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி

கொத்தமல்லி விதைகளும் இலைகளும் இன்றி அன்றாடச் சமையலில் அணுவும் அசையாது’ என்று


சொல்லும் அளவுக்கு, சமையல் ராஜாங்கத்தில் அவை முக்கிய இடம்வகிக்கின்றன. உலகின்
பழைமையான நறுமணமூட்டிகளுள் கொத்தமல்லி விதைகளும் ஒன்று கிட்டத்தட்ட ஒன்பதாயிரம்
ஆண்டுகளுக்கு முந்தைய புதைப்படிவ ஆதாரங்களின் மூலம் கொத்தமல்லியின் பயன்பாடு பற்றி
அறியமுடிகிறது. பண்டைய கிரேக்கம் மற்றும் அரேபிய சமையல் அறைகளை, தனது நறுமணத்தால்
கொத்தமல்லி அலங்கரித்துள்ளது. 

`ஈபெர்ஸ் பாபிரஸ்’ என்கிற எகிப்தின் பழைமைவாய்ந்த மருத்துவ நூலில் கொத்தமல்லி பற்றிய குறிப்பு
இருக்கிறது. ஹிப்போகிரேடஸ் தனது மருந்துகளில் கொத்தமல்லி விதைகளைக் கலந்துகொடுத்ததற்கான
ஆதாரங்கள் இருக்கின்றன. இளம் வயதிலேயே மரணமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர்
துதன்காமெனின் புதைகுழிக்குள் கொத்தமல்லியும் சேர்த்து புதைக்கப்பட்டதாம்!

கொத்தமல்லியின் பயன்பாடு உலகம் முழுவதும் பிரபலம். இந்தியா, லத்தீன் அமெரிக்கா, மத்தியத்


தரைக்கடல் நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்தமல்லி பரவலாகக்
காணப்படுகிறது. டர்கிஷ் காபியை நறுமணமூட்ட உதவுவது கொத்தமல்லியே. ஸ்பெயின் நாட்டில் 
புகழ்பெற்ற `கொரிஜோ’ என்கிற உணவில் கொத்தமல்லி முக்கியமான உட்பொருள். பாலடைக்கட்டியில்
கொத்தமல்லி விதைகளைத் தூவிச் சாப்பிடுவதில் பிரான்ஸ் மக்களுக்கு அலாதி விருப்பம். 

தனியா, உருள் அரிசி ஆகியவை கொத்தமல்லியின் வேறு பெயர்கள். காரச் சுவையுடன்கூடிய இதன்
விதைகள் பசியைத் தூண்டுவது, சிறுநீரைப் பெருக்கிக் கழிவுகளை வெளியேற்றுவது போன்ற
செயல்களைச் சிறப்பாகச் செய்யும். ‘கொத்தமல்லி குளிர்காய்ச்சல் பித்தமந்தம்… விக்கல் தாகமோடு
தாதுநட்டம்…’ எனும் சித்த மருத்துவப் பாடல், `பித்தத்தைக் குறைக்கவும் விக்கல், வாந்தியை நிறுத்தவும்
விந்து சார்ந்த நோய்களைச் சரிசெய்யவும் முக்கியமான மருந்து இது' என்பதை உணர்த்துகிறது. 

சமைத்த உணவில் கிராம்பு அல்லது பட்டையின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக உணர்ந்தால், சிறிது
கொத்தமல்லி விதைப் பொடியைத் தூவ, உணவின் சுவை முழுமையடையும். சாம்பார் பொடி, ரசப் பொடி,
மசாலா பொடி என இயற்கை வகையறாக்களில் மல்லிக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு. சமையலில்
சேர்க்கப்படும் மிளகாயின் காரத்தை மட்டுப்படுத்தி, வயிற்றுத் தசைகளுக்குப் பாதுகாப்பளிக்கும் இதமான
பொருள் இது. 

கொத்தமல்லியிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் நார்ச்சத்துகள் பெருங்குடல் புற்று நோய் வராமல்


தடுக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொத்தமல்லியில் உள்ள லினாலூல், ஜெரானைல் அசிடேட்
போன்ற பொருள்களே அதன் மருத்துவக் குணங்களுக்குக் காரணமாக அமைகின்றன. சாப்பிட்டவுடன்
மலம் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது, வயிறு கழிதல் அல்லது சில நேரங்களில்
மலக்கட்டு, வயிற்றுவலி போன்ற குறிகுணங்களைக் கொண்ட  `இரிட்டபிள் பவல் சின்ட்ரோம்’ எனும்
செரிமானம் சார்ந்த நோயைக் குணப்படுத்த கொத்தமல்லி விதைகள் உதவும் என்கிறது ஓர் ஆய்வு.
மத்தியக் கிழக்கு நாடுகளில் உள்ள பாரம்பர்ய மருத்துவத்தில், தூக்கமின்மையைப் போக்க கொத்தமல்லி
பயன்படுத்தப்படுவதாகக் கள ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொத்தமல்லி சேர்ந்த உணவுகளைத்
தொடர்ந்து பயன்படுத்தும்போது, கல்லீரல் செல்கள் புத்துயிர் பெறுகின்றனவாம். 

மல்லி வைத்தியம்

* தலைசுற்றல் ஏற்படும்போது கொத்தமல்லி, சந்தன சிராய்கள் மற்றும் நெல்லி வற்றலை சம அளவு


எடுத்துத் தண்ணீரில் ஊறவைத்துப் பருகலாம். 

* சந்தனத்துடன் கொத்தமல்லி விதைகளைச் சேர்த்து அரைத்துத் தலையில் பற்றுப்போட்டால் தலைவலி


உடனடியாகக் குறையும். 

* பனைவெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் கொத்தமல்லிக் குடிநீர், மாதவிடாயின்போது உண்டாகும்


அதிக ரத்தப்போக்கைக் குறைக்க உதவும். மல்லி விதை 50 கிராம், கசகசா விதை 25 கிராம் எடுத்துப்
பொடியாக்கிக் கொள்ளவும். இந்தப் பொடியை மோரில் கலந்து குடித்தால் செரிமானப் பாதை
பலப்படும். 

* அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவுப் பட்டியலில் பித்தத்தைத் தணிக்கும் கொத்தமல்லி
விதைகளைக் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

* `மது, டீ, காபி போன்ற பானங்களுக்கு அடிமையானவர்களுக்கு அஞ்சறைப் பெட்டியில் ஏதேனும்


விசேஷப் பொருள் உள்ளதா?’ என்று விடை தேடுபவர்களுக்கு, `மனம் மாற்றும் மணமான கொத்தமல்லி’
என்பதே பதில். மல்லித்தூள் 100 கிராம், மருதம்பட்டை பொடி 50 கிராம், செம்பருத்திப் பொடி 50 கிராம்
சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து மிதமான வெந்நீரில் கலந்து குடிக்க, குடிவெறி நீங்கும்
என்கிறது பாரம்பர்ய வைத்தியம். தனி கொத்தமல்லி விதைக்கும் இந்தச் செயல்பாடு உண்டு. மதுவின்
மீது உள்ள ஆசையைக் குறைக்கும் கொத்தமல்லியின் செயல்பாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட
வேண்டிய ஒன்று. 

* டீ மற்றும் காபிக்குப் பதிலாக, தினமும் கொத்தமல்லி பானத்தைப் பருகலாம். சீரகம், சுக்கு, உலர்ந்த
துளசி இலைகள், கொத்தமல்லி விதைகள் ஆகியவற்றைப் பொடித்து வைத்துக் கொண்டு, நீர்விட்டுக்
கொதிக்கவைத்து, சுவைக்குச் சிறிது தேன் சேர்த்துப் பருகலாம். 

* வாய் நாற்றம் நீங்க, கொத்தமல்லி விதைகளைப் புதினா இலைகளோடு சேர்த்து மென்று சாப்பிடலாம்.
`கொத்தமல்லி விதைகளுக்குள் இருக்கும் சிறிய முனைகளைத் தனியாகப் பிரித்து, உப்பு நீர் சேர்த்துத்
தயாரிக்கப்படும் மவுத்-பிரெஷ்னர், குஜராத் மாநிலத்தில் பிரபலம்.

* கொத்தமல்லி விதைகளைக்கொண்டு வடித்தெடுக்கப்படும் எண்ணெயை இரண்டு முதல் நான்கு துளி


அளவில் கொடுக்க செரியாமை, வயிற்றுப் பொருமல் குணமாகும். 

எப்படி வாங்குவது?
கொத்தமல்லி விதைகளில் இந்திய ரகம் தவிர ஐரோப்பா, மொராக்கோ, ரோமானியா ஆகிய பகுதிகளில்
இருந்துவரும் வகைகளும் உண்டு. பொடித்த கொத்தமல்லி விதைகளை வாங்குவதைவிட, முழு
விதைகளாக வாங்குவதே சிறந்தது. பொடித்த விதைகளின் வீரியம் விரைவில் குறைந்துவிடும். முழு
விதைகளின் வீரியமோ ஆண்டுக்கணக்கில் நிலைத்திருக்கும். வறுத்த பிறகு விதைகளைப் பொடியாக்கி,
சமையலில் பயன்படுத்தினால் நறுமணம் வீசும். ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை இருப்பதால், குழம்பு
மற்றும் சூப் வகைகளைக் கெட்டியாக்க கொத்தமல்லி துணைபுரியும். வறுக்கும் நேரத்தைப் பொறுத்தும்,
அதை அரைக்கும் நேரத்தைப் பொறுத்தும் கொத்தமல்லி வாசனையை மாற்றிக்கொண்டே இருக்கும். 

அஞ்சறைப் பெட்டி பொருள்களுள், சீரகமும் தனியாவும் சிறந்த சேர்க்கையாகக் கருதப்படுகிறது.


இரண்டையும் ஒன்றாகச் சேர்த்துப் பயன்படுத்தும் சமையல் நுணுக் கம், சுவையைப் பல மடங்கு
அதிகரிக்க உதவும். ஆச்சர்யம் என்னவென்றால், வட மாநிலங்களின் சில பகுதிகளில் தனியாவும்
சீரகமும் ஒன்று எனக் கருதும் அளவுக்கு இவை இணைபிரியா தோழர்கள்!

மல்லி வடகம்... மல்லி மசாலா!

வடகம்: கொத்தமல்லி, மிளகு, திப்பிலி, கறி உப்பு, கிராம்பு, ஓமம், கடுக்காய் தலா 30 கிராம் எடுத்து
நெய்விட்டு வதக்கி இஞ்சி 250 கிராம் சேர்த்து அனைத்தையும் தயிர்விட்டு நன்றாக அரைத்துக்கொள்ள
வேண்டும். சுண்டைக்காய் அளவு வடகங்களாகச் செய்து, உணவுக்குத் துணையாகச் சாப்பிடலாம். ஜீரணச்
சக்தியை அதிகரிக்கும் இந்த வடகம், சுவையிலும் சளைத்ததல்ல. 

டாபில் (Tabil): துனிஷிய நாட்டின் பிரபல மசாலா வகை இது. அரை கப் கொத்தமல்லி விதையையும்
இரண்டு டீஸ்பூன் சீமைச் சோம்பு விதைகளையும் பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு
டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் பூண்டுப்பொடியுடன் நன்றாகக் கலந்து பத்திரப்படுத்தவும். குழம்பு
வகைகளில் இதைப் பயன்படுத்தினால் வித்தியாசமான சுவை கிடைக்கும்.

 மலேசியன் கறி பேஸ்ட்: கொத்தமல்லி விதைகள் மற்றும் மிளகு தலா இரண்டு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன்
சோம்பு, சிறிய லவங்கப்பட்டை என அனைத்தையும் வறுத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். ஒரு
டீஸ்பூன் இஞ்சி, கால் கப் வேர்க்கடலை, நான்கு பூண்டுப் பற்கள், நான்கு சின்ன வெங்காயம் சேர்த்து
ஒன்றாக அரைத்து, மேற்சொன்ன பொடியுடன் கலந்துகொள்ளவும். கடைசியில் ஒரு டீஸ்பூன் மஞ்சள்தூள்,
ஒரு டீஸ்பூன் அரைத்த எலுமிச்சை புல், கால் கப் தண்ணீர், ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து
அரைத்து உருவாக்கப்பட்ட கலவை மலேசிய சமையல் அறைகளில் பிரசித்தம். அசைவ
வகையறாக்களுக்கும் இந்தக் கலவைக்கும் ஏகப் பொருத்தம்.

சடாய் (Satay): கறுப்பு உளுந்து, தயிர், கொத்தமல்லி மற்றும் பல நறுமணமூட்டிகள் கலந்து செய்யப்படும்


ஹிமாச்சல் பகுதியின் `மத்ரா’ எனப்படும் குழம்பு வகையில் கொத்தமல்லியின் வாசனை தூக்கலாக
இருக்கும். இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளில், கொத்தமல்லி விதைகள் மற்றும் இலைகளை அரைத்து
ஆட்டு இறைச்சியில் தடவி `சடாய்’ எனும் உணவு தயாரிக்கப்படுகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

அஞ்சறைப் பெட்டி - உள்ளுறுப்புகளுக்கு அற்புத மருந்து இஞ்சி

`செரிமான உறுப்புகள் மற்றும் சுரப்பிகளோடு சேர்ந்து, அஜீரணத் தொந்தரவுகளைத் தடுக்கும் அற்புத


மருந்து இஞ்சி.  ஆத்திரகம், அல்லம், ஆர்த்தரகம், இலாக்கொட்டை, நறுமருப்பு, மதில் போன்றவை
இஞ்சியின் வேறு பெயர்கள். `காலையில் இஞ்சி… கடும்பகல் சுக்கு… மாலையில் கடுக்காய்…’ என்பது
எளிமையான ஆரோக்கியச் சூத்திரம். இப்படி, காலம் அறிந்து தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட்டால்
உடல் திடம்பெறும். நோய்கள் வராமல் பாதுகாக்க சித்தர்கள் வகுத்த சிறந்த கற்ப முறை இது. 

இஞ்சியைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி உலர்த்தி, தேனில் ஊறவைத்து, தினமும் சாப்பிட்டால்
நரை, திரை, மூப்பு சீக்கிரம் நெருங்காது என்கிறது சித்த மருத்துவம். இந்த ‘நரை திரை மூப்பு’ என்பதில்
ஒளிந்திருக்கும் சூட்சுமத்தை அவிழ்ப்பதற்காக இஞ்சி சார்ந்து இன்றும் பல்வேறு ஆராய்ச்சிகள்
நடக்கின்றன. இதன் முடிவுகளோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உறுதிப்படுத்தப்பட்டு
ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டுள்ளன. 

ஜப்பானில் புகழ்பெற்ற `பெனி-ஷோகா' எனப்படும் சிவந்த நிறமுள்ள இஞ்சி ஊறுகாய்மீது, அந்நாட்டு


மக்களுக்கு அலாதிப் பிரியம். நொதிக்கவைத்த காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் கொரிய வகை
சாலட்டுகளில் இஞ்சி முக்கியமானது. இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியில் `ஜிஞ்சர்-பிரெட்' என்கிற இஞ்சி
ரொட்டிகள் பிரபலம். மியான்மர் நாட்டு மீன்கறியில், மீன் வாசனையைவிட, இஞ்சியின் வாசனை
தூக்கலாக இருக்கும். அதிக அளவில் இஞ்சி சேர்த்து மீன்கறி சமைக்கும்போது, மீன்வாடை குறைவதாக
மியான்மர் மக்கள் கருதுகின்றனர். ஜமைக்கா நாட்டின் ‘காரமான மசாலாப் பொடி’யில் இஞ்சி
சேர்க்கப்படுகிறது.

பயணங்கள், மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள், புற்றுநோய் மருந்துகளின் தாக்கம் உள்ளிட்ட பல


காரணங்களால் குமட்டல் உணர்வு ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கும் சில நேரம் இதே நிலை ஏற்படலாம்.
குமட்டல் உணர்வை நிறுத்த, பன்னெடுங்காலமாக நமது பாரம்பர்ய மருத்துவத்திலும், சீனா மற்றும்
ரோமானிய மருத்துவத்திலும் பரிந்துரைக்கப்படும் மருந்து, இஞ்சிதான். குமட்டலைத் தடுக்க வழங்கப்படும்
சில மருந்துகளால் ஏற்படும் நாவறட்சி, குழப்பம், சோர்வு போன்ற எவ்விதப் பக்கவிளைவுகளையும்
இஞ்சி உண்டாக்காது. ‘வாஸோபிரஸ்ஸின்’ எனும் ஹார்மோன் சுரப்பைத் தற்காலிகமாகத் தடுத்து,
பயணங்களில் உண்டாகும் குமட்டலை நிறுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தக் காலத்தில்
முதன்முறையாக கப்பல் பயணம் செய்வோருக்கு, குமட்டலைத் தடுக்க அனுபவமுள்ளவர்கள்
பரிந்துரைத்த முதன்மை மருந்து இஞ்சி. 
இஞ்சியில் உள்ள ஜிஞ்ஜெரால் எனும் வேதிப்பொருளுக்கு எதிர்-ஆக்ஸிகரணி, வீக்கமுறுக்கி,
நுண்ணுயிர்க்கொல்லி எனப் பல செயல்பாடுகள் இருக்கின்றன. புற்றுநோய் சார்ந்த ஆய்வு களின்
முடிவில், இஞ்சியில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ’ஜெரும் போன்’ எனும் பொருள், புற்று செல்களின்
வளர்ச்சியைத் தடுக்கும் மரபணுவைத் தூண்டுவதாகத் தெரிகிறது. அதேவேளை வேறு இடங்களுக்குப்
புற்றுநோய் செல்கள் பரவுவதையும் தடுக்கிறது. 

இரைப்பையில் தங்கும் உணவுப்பொருள்களின் நகர்வை விரைவுபடுத்தி எதுக்களித்தல், செரியாமை,


ஏப்பம் ஆகியவற்றைத் தடுத்து செரிமானத்துக்குத் துணை நிற்பதாக ஐரோப்பிய ஆய்வுக்கட்டுரை
உறுதிப்படுத்துகிறது. இஞ்சி சார்ந்த மருந்துகள் சிந்தடிக் வலி நிவாரணி மருந்துகளைப்போல
செயல்பட்டு, தீராத ஒற்றைத்தலைவலியைக் (மைக்ரேன்) குறைப்பதாகவும் ஆய்வுகள் சொல்கின்றன. 

இஞ்சி மற்றும் சிறிது புதினா இலைகளை வெண்ணெய் சேர்த்து அரைத்து, உணவுகளுக்குத் தொட்டுக்
கொள்ளலாம். பழத்துண்டுகளின் மீதும் பனிக்கூழ்களின் மீதும் சீவிய இஞ்சியைத் தூவிச் சாப்பிட, சுவை
அதிகரிக்கும். குரல் கம்மல் இருக்கும்போது, தோல் சீவிய இஞ்சியை மென்று அதன் சாற்றைக்
கொஞ்சமாக விழுங்கினாலே உடனடியாகப் பலன் கிடைக்கும். உணவைச் சாப்பிட்டு முடித்ததும், சிறிய
இஞ்சித்துண்டை வாயில் போட்டு சுவைக்கும் ஆரோக்கியமான பழக்கம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு
முன்பே இருந்துள்ளது.

இஞ்சிச் சாற்றோடு தேன் சேர்த்துப் பாகுபோல செய்து ஏலம், ஜாதிக்காய், கிராம்பு போன்றவற்றின்
பொடி சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அவ்வப்போது சிறு நெல்லிக்காய் அளவு வாயில் போட்டு
சுவைத்துச் சாப்பிட, வயிற்றுப்பொருமல், வாய்வுக்கோளாறு, வாந்தி போன்றவை சாந்தமடையும். `இஞ்சி
முரப்பா’ செரிமானக் கோளாறு, வாய்வுக்கோளாறை விரட்ட பல கால மாகப் பயன்படுத்தப்பட்டு
வருகிறது.

கோதுமை மாவு, பால், தேன், சர்க்கரை, இஞ்சி, ஏலம், மிளகு சேர்த்து பழங்காலத்தில் தயாரிக்கப்படும்
‘சம்யவா’ என்ற இனிப்பு பற்றி உணவு நூல்களில் குறிப்புகள் காணப்படுகின் றன. உடலுக்கு பலமூட்டும்
பானகம், குடலுக்கு நன்மை தரும் மோர், பல விதங்களில் நலம் பயக்கும் கரும்புச் சாறு போன்ற பான
வகைகள் தொடங்கி, பெரும்பாலான நமது உணவுத் தயாரிப்புகளில் நுண்கூறுகள் நிறைந்த இஞ்சி
சேர்க்கப்படுகிறது. சைனசைட்டிஸ் பிரச்னைக்குப் பயன்படுத்தப்படும் நீர்க்கோவை மாத்திரை எனும் சித்த
மருந்தை, இஞ்சிச் சாற்றில் உரைத்து வெளிப்பிரயோகமாக பற்றுபோட, விரைவாக நிவாரணம்
கிடைக்கும். 

பானைக்குள் ஈரமணலை நிரப்பி, அதில் இஞ்சியைப் புதைத்து, அவ்வப்போது ஈரம் குறையாமல் நீர்
தெளித்துவந்தால், சில வாரங்களில் இஞ்சி வளரத் தொடங்கிவிடும். தேவையானபோது, அதிலிருந்து
இஞ்சித் துண்டுகளை எடுத்துப் பயன் படுத்தலாம். இஞ்சியின் தோலில் நச்சுப் பொருள்கள் இருப்பதால்,
தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும். 

பார்வைக்கு மெல்லிய தோலுடனும் மெத்தென்றும் தொட்டுப் பார்க்கும்போது சற்று திடமாகவும்


இருக்கும் இஞ்சியை வாங்குவதே சிறந்தது. கேரளாவில் உற்பத்தியாகும் இஞ்சிதான் நிறைய
மருந்துவக்கூறுகளை உள்ளடக்கியது. இதற்கு ஜமைக்கா நாட்டு இஞ்சியும் சளைத்ததல்ல.

நமது ஆரோக்கியத்துக்கு உதவும் இஞ்சி எனும் மாமருந்துக்கு நாம் நன்றி சொல் கிறோமோ
இல்லையோ, நன்றி மறவா நம் செரிமான உறுப்புகள், நமக்குத் தெரியாமலேயே நன்றி
கூறிக்கொண்டேதான் இருக்கின்றன. 

இஞ்சி, பூமிக்கடியில் மறைந்திருக்கும் அற்புதம்!

இஞ்சிச் சூரணம்
500 கிராம் இஞ்சியின் தோலைச் சீவி, சிறிது சிறிதாக நறுக்கி, காயவைத்து, அதை நெய்யில் லேசாகப்
பொரிக்க வேண்டும். பிறகு 250 கிராம் அளவு சீரகத்தை லேசாக வறுத்து, இஞ்சியுடன் சேர்த்து அரைத்து
வைத்துக்கொள்ளவும். இவற்றுடன் 750 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும்.
மூன்று விரல் அளவு இஞ்சிச் சூரணத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வாந்தி, வயிற்று
மந்தம் போன்றவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். 

இஞ்சி மணப்பாகு 

250 கிராம் இஞ்சியை நறுக்கி, இரண்டு லிட்டர் நீர் சேர்த்து நன்றாக ஊறவைத்து, வெல்லம் சேர்த்து, சிறு
தீயில் கொதிக்கவைத்து பாகுபதத்தில் இறக்கிப் பயன்படுத்தலாம். இதைத் தினமும் அரை டீஸ்பூன்
அளவு சாப்பிட்டுவந்தால் சுவையின்மை, பசியின்மை தீரும்.

இஞ்சி டீ

இஞ்சியின் அத்தியாயம் முழுமையடைய, ‘இஞ்சி-டீ’ பற்றிப் பேசியே ஆக வேண்டும். அரை டீஸ்பூன்


ஏலம், இரண்டு மிளகு, சிறிது லவங்கப்பட்டை, கால் ஸ்பூன் பெருஞ்சீரகம். இவற்றை நன்றாகப் பொடித்து,
பாலில் கலந்து லேசாகக் கொதிக்கவைக்கவும். கூடவே, அரை டீஸ்பூன் இஞ்சி மற்றும் நாட்டுச் சர்க்கரை
சேர்த்துக்கொள்ளவும். மற்றொரு கோப்பை கொதிக்கும் நீரில் தேயிலைகளைப் போட்டு, ஐந்து
நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு, நறுமணமூட்டிகள் சேர்ந்த மேற்சொன்ன பாலில், தேயிலை சேர்ந்த
கொதிநீரைக் கலந்து கொடுப்பதே பாரம்பர்யமிக்க இஞ்சி டீ!

லா-காமா மசாலா! 

ஒரு டீஸ்பூன் அரைத்த இஞ்சி, ஒரு டீஸ்பூன் பொடித்த மிளகு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள், இரண்டு
டீஸ்பூன் லவங்கப்பட்டை, ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் போன்றவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்துக்
கலந்து வைத்துக்கொள்ளலாம். இதை `லா-காமா’ மசாலா என்பார்கள். மொராக்கோ நாட்டின் குழம்பு
வகைகள், சூப் வகைகள், மண்பானையில் சமைக்கப்படும் `டகைன்’ (Tagine) எனப்படும் பாரம்பர்ய
உணவு என அனைத்திலும் மருத்துவ குணம்மிக்க `லா-காமா’ மசாலா சேர்க்கப்படுகிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
கல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு

பசுமைமாறா மரத்தின் சிறிய மலர் மொட்டான கிராம்பு, வாசனையாலும் வசீகரத்தாலும் மருத்துவக்


கூறுகளாலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நலன் காத்துவருவது இயற்கையின் கவிதை. வைரத்தை
ஏந்திக்கொண்டிருக்கும் மோதிரம்போலவே காட்சியளிக்கும் கிராம்பு, அஞ்சறைப் பெட்டியின் விலை
மதிப்பில்லா வைரமே! 
நறுமணமூட்டிகளில் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டது கிராம்பு. ஆரம்பநிலை
பல்வலியைப் போக்க, கிராம்புத் தைலத்தைப் பஞ்சில் நனைத்துத் தடவும் மருத்துவம் இன்றைக்கும்
உதவுகிறது. பல் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் களிம்புகளில் கிராம்பின் நுண்கூறுகள் நிச்சயம்
இடம்பிடித்திருக்கும். பிரியாணியில் தொடங்கி அடிப்படை இனிப்புகள் வரை கிராம்பின் பங்களிப்பு
உறுதி.

இது ஆணி போலவும் காணப்படுவதால், `க்ளோவ்’ (Clove) என்று பெயர் வந்தது. லவங்கம், உற்கடம்,
அஞ்சுகம், சோசம், திரளி, வராங்கம் போன்ற வேறு பெயர்களும் உண்டு. காரத்தோடும் சிறிது இனிப்புச்
சுவையோடும் விறுவிறுப்புத்தன்மை கொண்டிருக்கும் கிராம்பு மயக்கம், வாந்தி, பேதி, வாய்வுக்
கோளாறுகள், ஆசனவாய் எரிச்சல், தசைப்பிடிப்பு, செவி நோய்கள், சரும நோய்கள் என பலவற்றை
நீக்கும் திறன் கொண்டது. ‘பித்த மயக்கம் பேதியோடு வாந்தியும்போம்’ எனத் தொடங்கும் சித்தர்
அகத்தியரின் பாடல், கிராம்பின் குணங்களை விவரிக்கிறது. 

`சீனத்தின் பொற்காலம்’ எனப்படும் `ஹான் ராஜ்ஜியத்தில்’ அரசரிடம் நிறைகுறைகளைக் கூற


வேண்டுமென்றால், பொதுமக்கள் வாயில் கிராம்பை அடக்கிக்கொண்டுதான் பேச வேண்டுமாம். கிருமிகள்
வாய்மூலம் பரவி அரசரைத் தாக்காமல் இருக்க இந்த ஏற்பாடு!

15-ம் நூற்றாண்டில் நறுமணமூட்டிகளுக் கான போர் உச்சத்திலிருந்தபோது, பிற நாடுகளுக்குக் கிராம்பின்


இருப்பிட ரகசியம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகப் பெரிய அளவிலான கிராம்புக் காடுகளை
டச்சுக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். 

கி.மு 17-ம் நூற்றாண்டில், மெசபடோமியா நாகரிகப் பகுதி மக்களின் சமையலறையில் கிராம்பு


பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. தனது பிறப்பிடமான இந்தோனேசியாவின்
மலுக்கா தீவுகளிலிருந்து நீர் வழி (கடல் பயணம்) மற்றும் தரைவழிப் பயணமாகத் தென்னிந்தியாவைத்
தாண்டி, அரேபிய பாலைவனத்தையும் கடந்து, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மெசபடோமியா
பகுதிகளுக்கு கிராம்பு சென்றடைந்துள்ளது. கிராம்பைத் தேடி சீனர்களும் ஆங்கிலேயர்களும்
பிரெஞ்சுக்காரர்களும் மலுக்கா தீவுகளுக்கு விரைந்தனர் என்கிறது வரலாறு. கி.பி 3-ம் நூற்றாண்டுக்குப்
பிறகான சீன இலக்கியங்களிலும் கிராம்பு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. 

ஒரு கிராம்பைத் தீயிட்டுக் கொளுத்தி, சமைத்து முடித்த உணவுகளில் மேலோட்ட மாகப் புதைத்து, ஒரு
பாத்திரத்தைக் கொண்டு மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த உணவின் மணமும் சுவையும்
பல மடங்கு அதிகரித்திருப்பதை உணரலாம். ராஜஸ்தானி சமையலில் இந்த `கிராம்பு புகையூட்டல்’
முறை அதிகளவில் பின்பற்றப் படுகிறது. 

மண்பானைச் சமையலின் சிறப்பை அதிகரிக்க, பானைக்குள் சிறிது நெய் சேர்த்து, ஒரு கிராம்பைப்
போட்டு, சில துளிகள் நீர்விட்டு, சிறு தீ மூட்டி மூடிவிட வேண்டும். சிறிது நேரத்துக்குப் பிறகு கிராம்பின்
மருத்துவக்கூறுகளால் செறிவூட்டப்பட்ட மண்பானையில் பாரம்பர்யச் சமையலைத் தொடங்கலாம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் குக்கிராமங்களில் இன்றைக்கும் `மண்பானைச் செறிவூட்டல்’ நடைமுறையில்
இருக்கிறது. 

இனிப்புச்சுவைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனிமையான `பார்ஸி மசாலா'வில் பொடித்த


கிராம்பு சேர்க்கப் படுகிறது. பண்டைய குஜராத்திய சமையல் கலாசாரத்தில் இனிப்பு, புளிப்புச் சுவை
கலந்த ஊறுகாய் தயாரிக்கும்போது, அதில் கிராம்பும் ஏலக்காயும் இடம் பிடித்திருக்கின்றன. திராட்சை
ரசத்தில் கிராம்பும் லவங்கப்பட்டையும் சேர்த்து, லேசாகக் கொதிக்கவைத்து அருந்தும் வழக்கம்
ஐரோப்பியருக்கு உண்டு. 

பொடித்த கிராம்பு, தோல் சீவிய சுக்கு தலா 50 கிராம், வறுத்த ஓமம், இந்துப்பு தலா 60 கிராம் எடுத்து
ஒன்றாகக் கலக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால், பசியை
அதிகரிக்கச் செய்து முறையான செரிமானத்தைக் கொடுக்கும். விந்தின் தரத்தை மேம்படுத்த உதவும்
சித்த மருந்துகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. நெல்லிக்காய், கடுக்காய், சீரகம் தலா 30 கிராம் சேர்த்துப்
பொடியாக்கி, அதில் ஐந்து கிராம் கிராம்புப்பொடி சேர்த்துப் பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.  

விலாமிச்சை வேர், கிராம்பு, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்துத் தயாரிக்கப்படும் ‘கிராம்பு வடகம்’ மயக்கம்,
வாந்தி போன்ற பித்த நோய்களைக் குறைக்க உதவும். தொண்டைப்புண் இருப்பவர்கள், ஒரு கிராம்பை
எடுத்து லேசாக வதக்கி, தேனில் நனைத்துச் சுவைத்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். வாந்தி
உணர்வு ஏற்படும்போது, ஒரு கிராம்பை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பயன்தரும். கிராம்பு,
புதினா, திருநீற்றுப்பச்சிலை, ஏலக்காயை நீர்விட்டுக் கொதிக்கவைத்து, அதன் வாசனையை முகர்ந்தால்
உடலும் மனமும் உற்சாகமடையும்.

கிராம்புக்கு ஆன்டி-ஹிஸ்டமைன் செயல்பாடு இருப்பதால், அலர்ஜி சார்ந்த நோய்களுக்கும்


பயனளிக்கும்.

வயிற்றுப்புண்களை உண்டாக்கும் ஹெலிகோபாக்டர் பைலோரி பாக்டீரியா வுக்கு எதிராக, கிராம்பில்


உள்ள `யுஜெனால்’ எனும் நறுமண எண்ணெய் செயல்படுவதாக ஆய்வுகளில் தெரியவருகிறது.
வைரஸ்களை எதிர்க்கும் மருந்துகளுடன் கிராம்பின் சத்துகளைச் சேர்த்துக் கொடுத்தபோது,
மருந்துகளின் வீரியம் அதிகரித்திருப்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். கிராம்பு `ஹெபடைடிஸ்’
வைரஸ்களின் ஆதிக்கத்தைத் தடுத்துக் கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும். கிராம்பை வாயில்
அடக்கிக்கொண்டால், மது அருந்த வேண்டும் என்ற எண்ணம் குறைவதாகவும் பதிவு
செய்யப்பட்டுள்ளது. 

கிராம்பை நம் உணவுகளில் தொடர்ந்து சேர்த்துவந்தால், முதிர்ந்த வயதில் வரக்கூடிய பல நோய்கள்


தடுக்கப்படும் என்கிறது ஓர் ஆராய்ச்சி. `புரோஸ்டாகிளாண்டின்ஸ்’ எனும் வேதிச்சேர்மத்தை உற்பத்திச்
காரணிகளைத் தற்காலிக மாகத் தடுத்து, வலியையும் வீக்கத்தையும் தடுக்க கிராம்பில் உள்ள `யுஜெனால்’
உதவும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கரோட்டின், தயாமின் என நுண்ணூட்டச் சத்துகளும்
கிராம்பில் இருக்கின்றன. 

கிராம்பு வாங்கும்போது, நான்கு மடல்களால் மூடிய மொட்டாகவும் முழுமையாகவும் இருக்கிறதா என்று


பார்த்து வாங்க வேண்டும். முழுமையாக இல்லையென்றால், வேறு சில குச்சிகளைச் சேர்க்கவும் மலர்
மொட்டுகளில் கலப்படம் நடக்கவும் வாய்ப்புகள் அதிகம். 

இனி உங்கள் நண்பர்களை வாழ்த்த வேண்டுமென்றால், விரைவில் வாடக்கூடிய பூங்கொத்துகளுக்குப்


பதில் வாடாத மலர்மொட்டுகளைப் பரிசளியுங்கள், கிராம்பின் வடிவில். உங்கள் வாழ்த்துகளின் விருப்பம்,
அவர்களது ஆரோக்கியத்தின் மூலம் நிறைவேறும்!
நறுமண ஆப்பிள் 

இரண்டு ஆப்பிள் பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு
நீர் சேர்க்க வேண்டும். அதனுடன் இரண்டு டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, ஐந்து கிராம்பு, அரை டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். அந்தப் பாத்திரத்தின்மீது ஏடு கட்டி, ஐந்து
முதல் பத்து நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். நன்றாக வெந்த ஆப்பிள் துண்டுகளின்மீது தேன்
ஊற்றிப் பரிமாறினால் மணம் கமழும் சிற்றுண்டி தயார். கிராம்பில் உள்ள நறுமண எண்ணெய்கள்,
பிரத்யேக வாசனையுடன் உங்களைப் பரவசப்படுத்தும். 

சீன மசாலா

மூன்று அன்னாசிப்பூ, ஒரு டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் வெந்தயம், ஒரு டீஸ்பூன் கிராம்பு, ஒரு
லவங்கப்பட்டை அனைத்தையும் ஒன்றாகப் பொடித்தால் சீன மசாலாப் பொடி தயார். சீன ருசியை
விரும்புபவர்கள் நோய் உண்டாக்கும் அஜினோமோட்டோவைத் தவிர்த்துவிட்டு, ஐந்து நறுமணமூட்டிகள்
நிறைந்த சீன மசாலாவை (Five Spices powder) சமையலுக்குப் பயன் படுத்தலாம்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

லவங்கப்பட்டை - அஹா... அதிசயம்

‘மரம் உரித்துப் போட்ட பட்டைகள் அவை; நயமாகச் சுருண்டு உருண்டு காய்ந்த


மரக்குச்சிகளைப்போல உருமாறியிருக்கும். ஆனால், அவற்றின் நறுமணம் அஞ்சறைப் பெட்டியை
அலங்கரிக்கும். அது என்ன?’ - இப்படியொரு வாசனைமிக்க விடுகதையைக் கேட்டால்,
நறுமணமூட்டிகளின் ரசிகர்களிடம் இருந்து ‘லவங்கப்பட்டை’ என்று பதில் வரும்.

சமையலில் மட்டுமன்றி வாசனைத் திரவியங்கள், மவுத் ஃப்ரெஷ்னர் எனப் பல்வேறு இடங்களில்


தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது லவங்கப்பட்டை. பெரும்பாலான பற்பசைகளில் சேர்க்கப்படும்
சகிக்கமுடியாத உள்பொருள் களின் சுவையை மட்டுப்படுத்த லவங்கப்பட்டைச் சாறு சேர்க்கப்படுவது
பற்பசைக்குள் ஒளிந்திருக்கும் ரகசியம். லவங்கப்பட்டையைப் புனிதமாகக் கருதி, கடவுளுக்குப்
படைத்தனர் கிரேக்கர்கள். சாக்லேட் ரகங்களில் இந்தப் பட்டையைச் சேர்த்து நறுமணம் ஏற்படுத்துவது
ஸ்பெயின் மக்களின் வாடிக்கை. நெதர்லாந்து திருவிழா உணவுகளில் ஒன்றான ‘ஸ்பெகுலாஸ்’ என்பதன்
முக்கியப் பொருள் லவங்கப்பட்டை. மாதுளம் பழச்சாற்றை அடிப்படையாகக்கொண்டு செய்யப்படும்
‘கோரெஸ்ட்’ எனும் இரான் உணவிலும் பட்டை இடம்பெற்றுள்ளது.
பட்டையில்லாமல் பிரியாணியா? வாய்ப்பே இல்லை! பிரியாணியைத் தாங்கிப்பிடிப்பதே பட்டையின்
பிரத்யேக மணம்தான். பிரியாணிக்குள் தனது சாரத்தை இறக்கி, செரிமானத்தைத் தூண்டும் இனிமையான
வஸ்து லவங்கப்பட்டை. இதைப் பொடியாக்கினால் அதிலுள்ள நறுமண எண்ணெய் விரைவில்
ஆவியாகிவிடும் என்பதால், பட்டைகளை அஞ்சறைப் பெட்டிக்குள் பாதுகாத்து வைப்பதே நல்லது. 

ஐம்பது கிராம் வெண்ணெய், இரண்டு டீஸ்பூன் கருப்பட்டியுடன் ஒரு டீஸ்பூன் பொடித்த


லவங்கப்பட்டையைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் நன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒல்லியான உடல்வாகு உள்ளவர்கள் இதை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால் விரைவில் சதை
பிடிக்கும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் சேர்ந்த 50 கிராம் திரிபலா சூரணத்துடன் 15 கிராம்
பட்டைத்தூள் சேர்த்து, பற்பொடியாகப் பயன்படுத்தலாம். இதே கலவையை வாய் கொப்பளிக்கும்
நீராகவும் பயன்படுத்தலாம். இதனால் பற்களில் உண்டாகும் கூச்சம், வாய் நாற்றம் மறையும்.

ஏலக்காய், தோல் சீவிய சுக்கு, லவங்கப் பட்டை... மூன்றையும் ஒன்றாகப் பொடித்து, 500 மில்லி கிராம்
தேனில் குழைத்துச் சாப்பிட்டால் செரியாமை, வயிற்றுப்பொருமல், கழிச்சல் குணமாகும். லவங்கப்பட்டை,
சோம்பு, கிராம்பு, சுக்கு தலா ஐந்து கிராம் எடுத்துக்கொண்டு 500 மில்லி தண்ணீர் சேர்த்துக்
கொதிக்கவைக்க வேண்டும். 100 மில்லியாக வற்றியதும் அதைப் பருகினால் உடலில் தோன்றும் அரிப்பு,
எரிச்சல் மறையும். ஒவ்வாமைப் பிரச்னையைப் போக்கும்.  

சுவாசக் கோளாறுகளைக் குணமாக்குவதிலும் லவங்கப் பட்டையின் பங்கு அதிகம். சுக்கு, மிளகு, திப்பிலி,
லவங்கப்பட்டை - வகைக்கு ஐந்து கிராம் எடுத்து, சிறிது துளசி இலையும் கருப்பட்டியும் சேர்த்துக்
குடிநீராகக் காய்ச்சிக்குடித்தால், மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம் உடனடியாகக் குறையும். தொண்டையை
அடிக்கடி செருமவைக்கும் வறட்டு இருமலுக்கு, அதிமதுரத்துடன் லவங்கப்பட்டை சேர்த்துப்
பொடியாக்கி ஐந்து சிட்டிகை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். 

‘அல்ஸைமர்’ நோயின் தீவிரத்தை லவங்கப் பட்டையின் உட்சாரங்கள் குறைப்பதாக


உறுதிபடுத்தப்பட்டுள்ளது. பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, யுஜெனால் போன்றவை அதன்
மருத்துவக் குணம் மிக்க செயல்பாடுகளுக்குக் காரணமாகின்றன.
வெள்ளைச் சர்க்கரை சேர்த்த காபி, டீக்குப் பதிலாக லவங்கப்பட்டையை வெந்நீரில் கொதிக்க வைத்து
தினமும் பருகிவந்தால் ரத்தத்தில் உள்ள  எல்.டி.எல் கொழுப்பு மற்றும் டிரைகிளிசரைடு ஆகியவற்றின்
அளவு கணிசமாகக் குறையும். லவங்கப்பட்டையைத் திரவ வடிவில் எடுத்துக்கொள்ளும்போது, சர்க்கரை
மற்றும் இதயநோய்களுக்கான வாய்ப்புகள் தடுக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

வயிற்றுப்புண்களைக் குணமாக்க லவங்கப் பட்டையைப் பயன்படுத்தலாம். பதற்றம் குறைக்கவும்


நினைவுத்திறன்அதிகரிக்கவும் லவங்கப்பட்டையைச் சேர்க்கலாம். லவங்கப்பட்டையை முகர்ந்து
பார்த்தாலே மனஅழுத்தம் குறையும். பூஞ்சைகள் மற்றும் சில வகையான வைரஸ்களை எதிர்த்துப்
போரிடக்கூடியது என்பதால் லவங்கப்பட்டை சேர்ந்த உணவுப் பதார்த்தங்கள் அவ்வளவு எளிதாகக்
கெட்டுப்போகாது. பயணங்களுக்கு முன்பு சிறிது லவங்கப்பட்டையை நீர்விட்டுக் கொதிக்க வைத்து
அருந்தினால் நீண்டதூரப் பயணங்களின்போது ஏற்படும் சிறுநீர் எரிச்சல் குறையும். தாய்ப்பாலை
அதிகரிக்கும் தன்மையும் பட்டைக்கு உண்டு. தலைபாரம் இருக்கும்போது, பட்டையை நீர்விட்டு
அரைத்து நெற்றியில் பற்றுபோட்டால் விரைவில் பாரம் இறங்கும். லவங்கப்பட்டைகள் மற்றும்
இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. வலிநிவாரணியாக லவங்கப்பட்டை எண்ணெய், பல்
மருத்துவத் தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மிளகு, பட்டை, இஞ்சி கலந்த சுவைமிக்க தயிரை மதிய
உணவுக்குப் பிறகு, தென்தமிழக மக்கள் சாப்பிட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. 

தேனுடன் லவங்கப்பட்டை, மிளகு, திப்பிலி மற்றும் சில நறுமணமூட்டிகளை ஒரு ஜாடியில் சேர்த்து சில
நாள்கள் உரக்குழிக்குள் புதைத்து, சூரியஒளி விழும்படி தயாரிக்கும் பானம் முற்காலத்தில் புகழ்
பெற்றதாக இருந்தது. பண்டிகை நாள்கள் மற்றும் விருந்தினர்களுக்கான பானமாகவும் இது
இருந்திருக்கிறது. சுவையுடன் செரிமானத்தைத் தூண்டுவதற்காக இது பயன்பட்டுள்ளது. இந்தப் பானத்தில்
சேரும் நறுமணமூட்டிகளுக்கு `சம்பரா’ பொருள்கள் என்று பெயர். 

இலங்கையில் விளையும் லவங்கப் பட்டைக்கே தரத்திலும் குணத்திலும் மதிப்பு அதிகம். நீளமான


பட்டையே முதல் தரமாகக் கருதப்படுகிறது. பட்டையை உரிக்கும்போது உதிர்ந்தவை, உடைந்தவை,
சீவல்கள் எல்லாம் குறைந்த தரம். தரம் குறைந்த பட்டைகளை ஏற்றுமதி செய்வதில் மடகாஸ்கர் தீவு
முன்னிலை வகிக்கிறது. லவங்கப்பட்டைகளுடன் பல்வேறு மரப்பட்டைச் சீவல்களைக் கலப்படம்
செய்கின்றனர். முகர்ந்து பார்த்தால் அவற்றில் சிறிதும் வாசனை இருக்காது. 

நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்து, மென்மேலும் பட்டை தீட்டி வளப்படுத்தும் லவங்கப்பட்டையை


அஞ்சறைப் பெட்டியின் அதிசயம் என்றால் மிகையல்ல!
பொட்லி மசாலா

சீரகம், மிளகு, வெந்தயம், ஏலக்காய், கிராம்பு, கொத்தமல்லி விதைகள் (தனியா), சித்தரத்தை, வெட்டிவேர்,
லவங்கப்பட்டை, அரைத்த இஞ்சி, பூண்டு போன்றவற்றை ஒரு மெல்லிய துணியில் பொட்டலமாகக் கட்ட
வேண்டும் (இதுவே பொட்லி மசாலா அல்லது பொட்லி முறை எனப்படும்). இறைச்சியை, பானை
அல்லது குக்கரில் நீர் ஊற்றி வேகவைக்கும்போது,அவற்றுடன் மேலே சொன்ன பொட்டலத்தையும்
போட்டுக் கொதிக்கவைக்க வேண்டும். அந்த நீரைக்கொண்டே, பிரியாணி அரிசியை வேக வைக்க
வேண்டும். பிறகு பிரியாணியை முழுமை யாகச் சமைப்பதற்குத் தேவையான கறி மசாலா, கறித்
துண்டுகள் சேர்த்துப் பக்குவப்படுத்தினால் சுவையான, மணம் நிறைந்த பிரியாணி ரெடி. பிரத்யேகமான
மணம் மற்றும் சுவைகொண்ட ஹைதராபாத் பிரியாணியில் ‘பொட்லி முறை’ முக்கியப் பங்குவகிப்பது
குறிப்பிடத்தக்கது.

பிரெஞ்சு ஸ்பெஷல்

கனிந்த இரண்டு வாழைப் பழங்கள், ஒரு கப் பால், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டைப் பொடி, நான்கு
முட்டைகளின் வெள்ளைக் கரு, இரண்டு டீஸ்பூன் வெண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து
மசிக்க வேண்டும். அதைத் தோசைக்கல்லில் ஊற்றி இரண்டு கோதுமை பிரெட்களை அந்தக்
கலவையின்மீது வைத்து, அவ்வப்போது முன்னும் பின்னும் திருப்பிப் பொன் வறுவலாக வறுத்து,
இறுதியில் லவங்கப்பட்டைப் பொடியைத் தூவி உண்ணலாம். பிரான்ஸ் மக்களின் பெரும்பாலான காலை
உணவு இதுதான். சில வெளிநாட்டு உணவுகளைப் போல, நோய் உண்டாக்கும் உணவாக இல்லாமல்,
சுவையுடனும் ஊட்டத் தைக் கொடுக்கும் ரெசிப்பியாகவும் இது இருக்கும்

You might also like