Download as docx, pdf, or txt
Download as docx, pdf, or txt
You are on page 1of 41

இயல்-3

கல்வெட்டுகள் கூறும் சமயம் சமுதாயம் மற்றும் பொருளாதாரம்

இறைவன் பெயர்

கூகையூரின் வரலாற்றைப் பற்றிய அறிந்து கொள்ள அங்குள்ள 5

கோவில்களின் கல்வெட்டுக்களும் துணைநிற்கின்றன. ஒவ்வொரு

கோவில்களின் கல்வெட்டுகளிலும் அக்கோவிலில் உள்ள இறைவன்,

இறைவி பெயர்களும், மற்ற இதர தெய்வங்களின் பெயர்களும்

கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. குலோத்துங்கச் சோழன் காலத்தில்

இராஜராஜக் கோவலராயன் என்பவன் இன்றைக்கு சுவர்ணபுரீசுவரர் என்று

அழைக்கப்படும் கோயிலைக் கட்டினான். இவனுக்கு “பொன்பரப்பினான்”

என்ற சிறப்புப் பெயர் உண்டு. சோழ மன்னர்கள் சிதம்பரம் கோயிலுக்கு


கூரையாக உள்ள செப்புத் தகட்டு ஓடுகளுக்கு பொன் முலாம்

அவ்வப்போதுப் பூசி அழகு பார்த்தமையால் "பொன் வேய்ந்தவர்கள்"

என்று அழைக்கப்பட்டார்கள். இது போலவே பாண்டியர்களும் சிதம்பரம்,

சீர்காழி கோயில்களுக்கு பொன் வேய்ந்தவர்களாகக் குறித்துக் கொள்வர்.

பொன் வேய்தல் என்ற அந்த மரபு பொ.ஆ. 12,13-ஆம் நூற்றாண்டுகளில்

"பொன் பரப்புதல்" என்ற விருதுப் பெயரினைக் கொண்டு விளங்கின.

அவ்வகையில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த இராஜராஜத்

திருக்கோவலராயன், பொன்பரப்பினான் என்ற விருதுப் பெயரினைக்

கொண்டிருக்கிறான். அரசர்கள் தங்கள் பெயரால், தாங்கள் எடுத்தக் கோயில்

இறைவனுக்கு பெயர் வைக்கும் மரபு தமிழகத்தில் காணப்படும் ஒரு

மரபாகும். இங்கு இராஜராஜ திருக்கோவலராயன் தான் எடுத்தக்


கோயிலுக்கு தனது விருதுப் பெயராலே "பொன்பரப்பின ஈஸ்வரம்" என்று

பெயர் வைத்துள்ளான். இப்பெயர் நாளடைவில் வடமொழிப் பெயர்

பெற்று, பொன்னைக் குறிக்கும் “சுவர்ணம்” என்றப் பெயரோடு

வர்ணப்புரீசுவரர் என்று அழைக்கப்படுகிறது. பல கல்வெட்டுகள் பொன்

பரப்பின சோழீஸ்வரமுடைய நாயனார்" என்றுக் குறிப்பிடும் போது, சில

கல்வெட்டுகள் "பொன்பரப்பின சோழீஸ்வர முடையான்" என்று

இறைவனைக் குறிப்பிடுகின்றன.

பஞ்சாட்சரநாதர் கோயில்

பஞ்சாட்சரநாதர் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள்

அவ்விறைவனைப் பஞ்சாட்சரநாதர் என்று குறிப்பிட்டுள்ளன.

பொன்பரப்பின ஈஸ்வரமுடையான் கோயிலில் உள்ள அம்மன்


பெரியம்மை, நாச்சியார், பெரியம்மை என்று கல்வெட்டுகளில்

குறிப்பிடப்படுகிறார். பஞ்சாட்சரநாதர் கோயிலில் உள்ள அம்மன்

"ஒப்பில்லாத அம்மை" என்று பெயர் பெற்று விளங்கியதை ஒரு

கல்வெட்டில் (க.எண்.106) காண்கின்றோம். இவ்வூர் பஞ்சாட்சரநாதர்

(கோயிலில்) பெயரில் நாயனார் என்றப் பின்னொட்டுச் சொல்

காணப்படாது, நாதர் என்றப் பின்னொட்டுச் சொல்லுடன் காணப்படுகிறது.

மேலும் இவ்விறைவன், தேவர்கள் தம்பிரனார் என்ற அடைமொழியுடன்

கல்வெட்டுகளில் காணப்படுகிறார். மேலும், இவ்வூர் கல்வெட்டுகளில்

ஸ்ரீஇரணமுகராமப் பெருமாள், இராஜநாராயண விண்ணகரப் பெருமாள்

ஆகியத் திருமால் கோயிலின் இறைவன் பெயர்கள் காணப்படுகின்றன. சிறு

தெய்வப் பெயர்களாக இளைய நாயனார் (முருகன்), பகவதியாழ்வார்,


சாட்சிநாதர் ஆகிய பெயர்களும் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில்

பஞ்சாட்சரநாதர், தேவர் தம்பிரானார் என்று அழைக்கப்படுகிறார்.

கொடைச் செய்திகள்

கூகையூரில் உள்ள கல்வெட்டுகள் பலவற்றில் இறைவனுக்குக்

கொடைக் கொடுக்கப்பட்ட செய்திகள் காணப்படுகின்றன. இந்த

கல்வெட்டுகளில் நிலங்களும், நொந்தா விளக்கெரிக்கக் கால்நடைகளும்

தானம் கொடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கச் செய்தியாகும். பணம்,

பொன் போன்றவைகளும் தானமாக வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலும்

வரிவருவாய்கள் கோயிலுக்குத் தரப்பட்டுள்ளன. மூன்றாம் குலோத்துங்கச்

சோழன் காலத்தில் கூகையூரில் அவனது சிற்றரசன் இராஜராஜ

கோவலராயன் என்பவன் ஸ்ரீகைலாசமான உடையார் பொன்பரப்பின


ஈஸ்வரமுடைய நாயனாரை எழுந்தருளிவித்து திருக்கற்றளி கட்டியுள்ளான்.

மேலும், அர்த்த மண்டபம், ஸ்னபன மண்டபம், நிருத்த மண்டபம்,

முதற்பிரகாரம், இரண்டாம் பிரகாரம், திருக்கோபுரம் முதலியவற்றையும்

கட்டியுள்ளான் என்ற விவரம் தெரியவருகிறது.

பராமரிப்புக்கு நிலக்கொடை

கட்டிய கோயிலைப் பராமரிக்க இவ்வூருக்கு கிழக்கில் திருமடைப்

பள்ளிப்புறமாக இரண்டரை வேலி நிலம் கொடுத்துள்ளான். இந்த கோயில்

பூஜைக்கு நான்கு சிவபிராமணர்களை வைத்து இவ்வூர் கிழக்கில் 52 வேலி

நிலமும் கொடுத்துள்ளதாக சுவர்ணபுரீசுவரர் கோயிலில் உள்ள ஒரு

கல்வெட்டுக் (க.எண்.93 ) குறிப்பிடுகிறது. இதுதவிர, இந்த நிலங்களுக்கு

நீர்ப்பாய்ச்சி பயிர் செய்ய "வீரபயங்கரம்" என்ற ஏரியும் வெட்டி தானம்


செய்ததாக இந்த கல்வெட்டுக் கூறுகிறது. தானம் செய்யப்பட்ட நிலங்களின்

எல்லைகளும் கூறப்பட்டுள்ளன.

இக்கோயிலில் உள்ள மற்றொரு கல்வெட்டு (க.எண்.95) மேற்சொன்ன

இராஜராஜ கோவலராயனின் படைத்தலைவர்களில் ஒருவரான (அகம்படி

முதலி) ஆச்சன் கல்லையான வன்னியன், சந்திவிளக்கிற்காக இரண்டு

பசுக்களும், ஒரு கன்றும் கொடுத்துள்ளான் என்பதைத் தெரிவிக்கிறது.

மேலும், சிவபிராமணர் மூன்று பொன் பெற்றுக் கொண்டு சந்தி

விளக்கெரிப்பதற்காக ஒப்புதல் தெரிவித்துள்ளனர். துலுக்கன் நாயக்கன்

என்பவன் தன்னுடைய நாயக்கத் தானமாக அமைந்துள்ள சிற்றேரி என்ற

ஊரில் கிடைக்கும் பல்வேறு வரிவகைகளை கோயிலுக்கு விசாக நட்சத்திரம்


பெற்ற அமாவாசை நாளில் கொடையாகத் தந்துள்ளான் (க.எண்.95), என்று

கல்வெட்டு குறிப்பிடுகிறது.

ரெளத்திரி வருஷத்தைச் சார்ந்தக் கல்வெட்டு, பெருங்கொண்டைத்

தம்மய நாயக்கர் என்பவன் இராமன், இராகவன், நாராயணன், கிருஷ்ணன்

ஆகியச் செப்புத் திருமேனிகளை (உற்சவமூர்த்தி செய்து கொடுத்தான் என்ற

செய்தியைச் சொல்கிறது. மேலும், சிதைந்து போன மகாமண்டபத்தைச்

செப்பனிட்டு திருமதில், திருக்குளம் ஆகியவைக் கட்டி, கொடிக் கம்பம்

(கட்டடக்கலை கம்பம்) அமைத்து, ஸ்தூபியையும் செய்து கொடுத்தச் செய்தி

சொல்லப்பட்டுள்ளது. மேற்சொன்னச் செப்புத் திருமேனிகளின் திருவிழா,

ஆராதனை ஆகியவை நடத்தும் செலவுகளுக்கு 1000 குழி நஞ்சை

மேலப்பட்டி என்ற இடத்தில் வழங்கியதைச் சொல்கிறது. திருமலைத்


திருவிளக்கு, ஒரு நேரபூஜை ஆகியவை நடத்தவும் வழி

செய்யப்பட்டிருக்கிறது. மேலும் காசாண்பட்டு என்ற இடத்தில் (ஊர்) 600

குழி நஞ்சை நிலமும், 1500 குழி புஞ்சை நிலமும் வரி நீக்கி கொடுத்த

செய்தியும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் பெருமாள் கோயில் திருச்சுற்றில்

தென்னை மரங்கள் நட்டும், பெருமாள் கோயில் அமைத்தும், திருவிளக்கு,

திருமாலை ஆகியவைக் கொடுத்த செய்தியும், பிற கொடைகளும்

இக்கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன (க.எண்.123).

சகவருடம் 1446-ஐச் சார்ந்த திருமலை தேவமகாராயர் கல்வெட்டு,

மிருத்துயுஞ்ஜய நாயக்கர்களும், நாட்டவரும் பஞ்சாட்சரநாதருக்கு

புள்ளங்குளம் ஏரியின் கீழ் பாசனத்தில் உள்ள நிலங்களை தர்ம மானியமாக

கொடுத்தச் செய்தியை சொல்கிறது (க.எண்.116).


சகவருடம் 1424-ஐச் சேர்ந்த இராஜநாராயணப் பெருமாள் கோயில்

கல்வெட்டு, இராஜநாராயண விண்ணகரப் பெருமாளுக்கு

திருவிடையாட்டம் நிலமாக சந்திரகிரகண நாளில் காசரான்பட்டு என்ற

ஊரையும், அதன் வரிவருவாய்களையும் கொடுத்தச் செய்தியினைக்

குறிப்பிடுகிறது. இந்த கொடை மதுரைச் சொக்கநாதர் கோயிலில்

இருந்தபோது அண்ணம்ம நாயக்கரால் தாரை வார்த்து தரப்பட்டதாக

குறிப்பும் உள்ளது (க.எண். 122).

பராபவ வருடத்திய கல்வெட்டு சூரப்ப நாயக்கர் அய்யனின்

காரியக்கர்த்தாவான வடமலை நாயக்கர், பஞ்சாட்சரநாதர் கோயிலில்

இளைய நாயனாரைப் (முருகன்) புதிதாகப் பிரதிட்டை செய்து. அதற்கான

விசேஷ பூஜைகளுக்கும், கார்த்திகை பூஜைகளுக்கும் ஒரு கொடை


கொடுத்ததாக குறிப்பிடுகிறது. கல்வெட்டு முற்றுப் பெறாததால் கொடை

எது என்று தெரிந்துக் கொள்ள இயலவில்லை (க.எண்.119).

சகவருடம் 1446-ஐச் சார்ந்த திருமலைத் தேவமகாராயரின் கல்வெட்டு,

அவருடைய புண்ணியத்திற்காகவும், அவரது தந்தை கிருஷ்ணதேவ

மகாராயர் புண்ணியத்திற்காகவும், தேவர்கள் தம்பிரான் பஞ்சாட்சரநாதர்

கோயிலின் மகாபூசை மற்றும் திருப்பணி செலவுக்காக சிறுநிலா என்ற

ஊரும், அதன் வரிவருவாய்களையும், மானியமாகத் தரப்பட்ட செய்தியைக்

குறிப்பிடுகிறது. இதனை மருத்யுஞ்ஜய நாயக்கர் செய்துள்ளார் (க.எண்.115).

சுந்தரபாண்டியனின் காலத்திற்கு பிறகு பொன்பரப்பின

ஈஸ்வரமுடைய நாயனார் கோயிலில் சுந்தரபாண்டியன் சந்தி என்ற பூஜை

ஏற்படுத்தி, அந்த பூஜைக்கும், திருவிழா மற்றும் பராமரிப்பு (திருப்பணி)


செலவுகளுக்காக புள்ளங்குளம் என்ற ஊரும், அவ்வூரில் இருந்து

கிடைக்கும் வரிகளும் ஒரு சேரக்கோயில் நிர்வாகிகளிடம் (தானத்தார்)

கொடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது (க.எண்.102).

யுவ வருடத்தில் குறிப்பிடப்படும் கல்வெட்டு, சூரப்பவாண்டயர்

மற்றும் தென்கரைச் சீர்மை நாட்டவர்கள் இணைந்து பெள்ளம் கொண்ட

திம்மய்யரின் புத்திரனும், எல்லம்மராசயர் என்பவரின் சகோதரனுமாகிய

இரங்கப்பய்யர் என்பவருக்கு பொன்பரப்பின ஈஸ்வரமுடையார்

கோயிலில் உள்ள அம்மன் பெரியம்மைக்கு உச்சிகால அமுது

படைப்பதற்காக (நெய்வேத்தியம்) குறிப்பிட்ட சில கிராமங்களில் உள்ள

நிலங்களை கொடையாகத் தந்துள்ளனர் (க.எண். 105). என்ற செய்தி

கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுத் தேவமகாராயரின் சகம் 1453-ஆம் ஆண்டு கல்வெட்டு,

அவ்வாண்டில் மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று நிகழ்ந்த சந்திர கிரகணம்

தொடர்பாக (கும்ப நாயிற்று பூர்வ பட்சத்து பௌர்ணமியும் சோம கிரகண

புண்ணிய காலமும் மக நட்சத்திரமும் குருவாரமும் பெற்ற நாள்) மட்டைப்

பாறை என்ற ஊரில் அடங்கிய நிலங்கள் அனைத்திற்குமாக கிடைக்கும்

குறிப்பிட்ட வரிவருவாய்களை பஞ்சாட்சரநாதர் மற்றும் தேவர்கள்

தம்பிரான் கோயிலுக்கு சர்வ மானியமாக கொடுத்த செய்தியைக்

குறிப்பிடுகிறது (க.எண்.113).

சகவருடம் 1465-இல் விசுவநாத நாயக்கரின் அதிகாரி ஒருவரும்,

நாட்டில் உள்ள தலைவர்களும் (முதலி) சேர்ந்து, விஸ்வநாத நாயக்கர்

சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்றும், தனக்கும் நன்மை உண்டாக


வேண்டும் என்ற நோக்கத்திலும் பொன்பரப்பி சோழீசுரமுடைய நாயனார்

தம்பிரனார் கோயிலில் மகா பூஜை நடத்துவதற்காக குறிப்பிட்ட சில வரி

வருவாய்களை தர்மதானமாகக் கொடுத்துள்ளனர் (க.எண். 99).என்ற செய்தி

கூறப்பட்டுள்ளது.

அச்சுததேவராயரின் சகவருடம் 14[6]5-ஆம் ஆண்டு கல்வெட்டு,

பொன்பரப்பின ஈசுவரமுடையார், தேவர்கள் தம்பிரானார், சாட்சிநாதர்

ஆகிய தெய்வங்களுக்கு மகாபூஜை நிகழ்த்துவதற்காகவும் மற்றும்

பராமரிப்பு செலவுகளுக்காகவும் மல்லப்ப நாயக்கரின் பொறுப்பில் இருந்த

கிராமங்களின் வரிவருவாயை முறையே மூன்று பங்குகளாகப் பிரித்துள்ளச்

செய்தியைக் குறிப்பிடுகிறது (க.எண்.108).


சதாசிவ தேவராயரின் சகம் 1468-ஆம் ஆண்டு கல்வெட்டு,

பொன்பரப்பின ஈஸ்வரமுடையார் கோயில் தானத்தார், ஊரார், உரத்த

பாப்பு நாயக்கர் ஆகியோர் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட

நிலப்பகுதியை திருப்பணிப் பேட்டை (தொழில் பகுதி) என்ற பெயரில்

தந்துள்ளனர். இந்த பேட்டையிலிருந்து கிடைக்கும் வரிவருவாய் தேவன்

தம்பிரனார் பஞ்சாட்சரநாதர் கோயில் திருப்பணிக்காக பயன்படுத்தப்பட

ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டையில் விருப்பப்பட்ட குடிகளை

குடியேற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது (க.எண்.112).

சகவருடம் 1468- ஐச் சேர்ந்த கல்வெட்டு, சூரப்ப நாயக்கரின்

காரியக்காரரும், பாப்ப நாயக்கரின் மகனுமான வடமலை நாயக்கர்,

பஞ்சாட்சரநாதர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு (இளைய


நாயினார்) வெள்ளிக்கிழமை மற்றும் கார்த்திகை நாட்களில் வழிபாடுகள்

மற்றும் மகாபூஜை நடத்துவதற்காக புலவனூர் கலம் என்ற ஊரில் நஞ்சை,

புஞ்சை நிலங்கள் நூற்று பதினைந்து குழி பரப்பளவில் நாட்டாரைக்

கொடுக்கும்படிச் செய்துள்ளார். இந்த மகாபூஜை பகல் விளக்கு, இராத்திரி

சாம விளக்கு, அமுது வெற்றிலை (இலை) ஆகியவற்றோடு,

வெள்ளிக்கிழமை விசேஷ பூஜைக்காக நான்கு பழம், ஒரு தேங்காய்,

சாத்துப்படிக்கான எண்ணெய், ஒரு விளக்கு, திருமஞ்சனத் திரவியம்,

கறியமுது, அமுதுபடிக்கு இரண்டு நாழி அரிசி ஆகியவைகளைக் கொண்டு,

கார்த்திகை நட்சத்திர நாட்களில் அமுது படியும் செய்யப்பட்டது

(க.எண்.114).என்று கல்வெட்டு குறிப்பிடுகிறது


சகவருடம் 1483-ஐச் சேர்ந்த சதாசிவ தேவராயரின் கல்வெட்டு,

பொன்பரப்பின ஈஸ்வரத்து அம்மன் பெரியம்மைக்கும், பஞ்சாட்சரநாதர்

கோயில் அம்மன் ஒப்பில்லாத அம்மைக்கும், வெள்ளிக்கிழமை பூஜை

நடத்துவதற்காக (சுக்ரவார விசேஷ பூஜைக்கு) சூரப்ப நாயக்கரின் காரிய

தரிசியும், தென்கரைச் சீர்மையின் அதிகாரியுமான கிருஷ்ணப்ப நாயக்கரின்

நலத்தின் பொருட்டு தென்கரைச் சீர்மை நாட்டவர்களும், அதிகாரியும்

கூகையூரில் அமைந்த பேட்டையில் கிடைக்கப் பெறும் வரிவருவாய்களைத்

தந்துள்ளனர் (க.எண்.106).என்று தெரிவிக்கிறது.

கைலாசநாதர் கோயிலில் உள்ள சகவருடம் 1506 -ஐச் சேர்ந்த

கிருஷ்ணப்ப நாயக்கரின் கல்வெட்டு, கிருஷ்ணப்ப நாயக்கரும்,

நாட்டவரும் இணைந்து புல்லங்குளத்தில் உள்ள பள்ளியல் பாளையத்தில்


மொரய்யரின் புண்ணியத்துக்காக வெட்டுவிக்கப்பட்ட ஒரு ஏரியின்

(தாங்கள்) நான்கு எல்லைகளை குறிப்பிட்டு, அதனை கைலாயம் உடையார்

கோயிலுக்கு சர்வமானியமாக கொடுத்தச் செய்தியினைக் குறிப்பிடுகிறது.

(க.எண் 121).

வரிகளும் வரிவிதிப்பும்

கூகையூர் கல்வெட்டுகள் சோழர் கால இறுதியிலும், விஜயநகரர்,

நாயக்கர் கால இறுதியிலும் வெட்டப்பட்டவை. ஆதலால் கோயிலுக்குக்

கொடுத்த கொடைகள் தொடர்பான செய்திகளில் பலவும், குறிப்பிட்ட

எல்லைக்குள் அடங்கிய ஊர்களைக் கொடுத்து, அந்த ஊர்களில் இருந்து

கிடைக்கக்கூடிய வரிவருவாயை (விலக்கு) அளித்து கோயிலுக்குக்

கொடுத்ததையே சொல்கின்றன. மேலும், சில கல்வெட்டுகள் மகதை


மண்டலத்தின் நாட்டவர்கள் பொதுவாக விண்ணப்பித்ததின் தொடர்பால்

அப்பகுதி நாயக்கர்கள் பொது வரிவிதிப்பு கொடுத்ததைச் சொல்கின்றன.

இக்கல்வெட்டுகள் கோயில் தொடர்பானவை இல்லையென்றாலும் அரசின்

ஆணையை விளம்பரப்படுத்தவும், பதிவு செய்யவும், கோயில் கற்சுவற்றில்

பொறிக்கப்பட்டவையாகும்.

விஜயநகரர் கால வருவாய் சொற்களை தொகுத்து பகுதி

வாரியாகவும், கால வாரியாகவும், விஜயநகர ஆட்சிக்கு முற்பட்ட

சம்புவராயர் கால வரிகளோடு ஒப்பிட்டும் ஆய்வு செய்த ஆய்வாளர்கள்

"Vijayanagara Rule in Tamil Country as Revealed Through a Statistical Study of

Revenue Terms in Inscription" என்ற நூலில் கூகையூர் கல்வெட்டுகளையும்

பயன்படுத்தி ஆய்வு செய்துள்ளனர். விஜயநகரர் காலத்தில்

தமிழர்களின் வட பகுதியில் அமைந்த வழுதிலம்பட்டு சாவடி என்ற


பகுதியே விஜயநகர மன்னர்களின் வரிவிதிப்புக்கு கடுமையாக உட்பட்டது

என்பது அவர்களின் கருத்தாகும். விஜயநகர மன்னர்களின் பிரதிநிதிகளின்

தொகுதிகளான சீர்மை மற்றும் பற்றுகளை நாயக்கத்தனமாக உடைய

நாயக்கர்கள் அரசனின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தங்கள் விருப்பம்

போல் வரிகளை வசூலித்திருக்கின்றனர். அவர்களது முறையற்ற

வரிவசூலிப்பால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டவர்கள் நாடுகளின்

சபையோர்களான நாட்டார்களும், பிராமணர்களின் சபையோர்களான ஒரு

சில சபையோரும் ஆவர். இவர்கள் விஜயநகர மன்னர்களாக விளங்கிய

கிருஷ்ணதேவராயர் மற்றும் அச்சுத தேவராயரை நேரடியாக அணுகி

தங்கள் குறைகளைக் கூறி வரிவிதிப்பில் சாதகமான மாற்றங்களையும், வரி

நீக்கங்களையும் பெற்றுள்ளனர். சில வேளைகளில் மன்னர்கள் அல்லது


நாயக்கத்தனம் உடைய நாயக்கத் தலைவர்களை அணுகி நாயக்கர்களே

வரிவிளக்கு செய்துள்ளனர்.

வரிவிதிப்புத் தொடர்பாக கூகையூரில் குறிப்பிட்டத்தக்க கல்வெட்டு

ஒன்று உள்ளது. சகவருடம் 1369 -இல் வெட்டப்பட்ட இக்கல்வெட்டு,

வாசுதேவ நாயக்கர் மகன் திருமலை நாயக்கனிடம் மகதை மண்டலத்தைச்

சேர்ந்த நாட்டார்கள் ஏற்கனவே இருந்த அளவு கோலின் மூலம் நிலங்களை

அளந்து வரி விதிப்பதால் வரி கூடுதலாக இருந்தது என்றும், உழவர்கள்

மிகவும் சிரமப்பட்டனர் என்றும், கோலின் அளவை இரண்டடிக் கூட்டி 20

அடி கோலாக நிலங்களை அளந்தால் வரி குறைந்து சிரமம் ஏற்படாது

என்றும் விண்ணப்பித்தனர். இவர்களது கோரிக்கைகளை இந்த நாயக்கர்கள்


நிறைவேற்றி வரிப்பளுவை குறைத்தனர் (க.எண்.97)என்றும் கல்வெட்டு

குறிப்பிடுகிறது.

சகவருடம் 1404-ஐச் சேர்ந்த கல்வெட்டு, அன்று நிலவிய வரிக்

கொடுமையைப் படம் பிடித்து காட்டுகிறது. இக்கல்வெட்டு காலத்திற்கு

சற்று முன்னதாக, ஒவ்வொரு ஊரிலும் கட்டாயமாக கரும்பு பயிரிடச்

செய்து, அவ்வவ்வூர்களிலேயே கரும்பாலை வைக்கச் சொல்லி நிர்பந்தம்

செய்து, வரி வசூலித்தார்கள் என்றும், அது உபத்திரமாக இருந்ததால்

உழுகின்ற குடிகள் ஓடிப்போனார்கள் என்றும் சொல்கிறது. ஊரில் இருந்த

எருமை, பசு, ஆடு ஆகியவை நற்கடா, நற்பசு, நல்லெருமை என்ற வரி

விதிப்புகள் மூலம் முறையில்லாமல் கையகப்படுத்தப்பட்டன என்றும்

சொல்கிறது. அதிகாரிகள் 1/10 என்ற விகிதத்தில் வர்த்தனை என்ற வரியை


வசூலித்து கொடுமைப்படுத்தினர் என்றும் குறிப்பிடுகிறது. இப்படி

வாங்கப்பட்ட வர்த்தனை வரியை 'நொட்ட வர்த்தனை' என்று கூறுகின்றனர்.

“ஆள் அமஞ்சு” என்ற வரி அடள் தோற்றமாக (முறையில் கூடுதலாக)

வசூலிக்கப்பட்டது என்றும் குறிக்கப்படுகிறது. இந்தச் சீர்மையில்

குடிகளைப் புதிதாக சேர்த்தால் ஒன்றுக்கு இரண்டாக அடையோலை எழுதி

ஊர் வரியாக கொண்டார்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்

புதிதாக செய்யப்பட்ட அதிகாரிகளால் கட்டாயப்படுத்தப்பட்ட வரிக்

கொடுமைகள், அன்று இப்பகுதி நாயக்கராக இருந்த சிக்கபர்வத

நாயக்கரிடம் மேல்முறையீடு செய்யப்பட்டு நீக்கப்பட்டன என்றும், பழைய

மரபுபடியே மீண்டும் வரிகள் வசூலிக்கப்பட்டன என்றும்

காட்டுகிறது(க.எண். 103).
கூகையூர் கல்வெட்டில் காணப்படும் வரிகளின் எண்ணிக்கை

ஏறத்தாழ 120 உள்ளன .

இடப்பெயர்களும் நிலங்களும்

கூகையூர் கல்வெட்டுகளில் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள்,

அவற்றின் எல்லைகள் குறிக்கப்படும் போது நமக்கு நிலப்பெயர்களும்,

இடப்பெயர்களும் தெரியவருகின்றனா கூகையூர் கல்வெட்டுகள்

விஜயநகரக்காலக் கல்வெட்டுகள் என்பதால் இப்பெயர்கள் குறைந்த

அளவிலேயே நமக்குக் கிடைக்கின்றன. குலோத்துங்கச் சோழனின்

(க.எண்.93) கல்வெட்டில், கணபதி மேடு என்ற மேடும், அரண் ஒன்றும்

சொல்லப்பட்டுள்ளன. சதாசிவ தேவரின் சகம் 1468-ஐச் சேர்ந்தக்

கல்வெட்டில், பேட்டை என்றும் குறிக்கப்படுகிறது. பேட்டை, தொழில்


கூடங்கள் உள்ளதாகவும், சந்தைக்கூடும் இடமாகவும் இருக்கலாம்.

மற்றொரு கல்வெட்டில், மடைவிளாகம் (க.எண்.124) சொல்லப்பட்டுள்ளது.

இப்படிக் கிடைக்கும் துண்டு துண்டான இடம், பெயர்களைக் கொண்டு

பண்டைய கூகையூர், ஐந்துக்கும் மேற்பட்ட கோயில்களை உடைய

ஊராகவும், கோயில்களை ஒட்டி கோயில் பணியாளர்கள்

குடியிருப்புகளான மடைவிலாகங்களைக் கொண்டும் அமைந்திருந்ததை

அறியமுடிகிறது. மேலும், வாணியத்தெரு அமைந்திருந்ததைப் பார்க்கும்

போது வணிகர்களுக்கு தனிக் குடியிருப்பு இருந்தது என்றும் கருதலாம்.

கல்வெட்டில் குறிக்கப்படும் அறம், சோழர்கால இறுதியில் இப்பகுதியில்

கோட்டை அல்லது அரண்மனையும், அதற்குப் பாதுகாப்பான சுவர்களும்

இருந்திருக்கக் கூடும் என்றச் செய்தியைக் காட்டுகிறது. பல


கல்வெட்டுகளிலும் நிலங்கள் இடையே நத்தம் குறிக்கப்படுவதைப்

பார்க்கும் போது சில விளைநிலம் சார்ந்த குடியிருப்புக்களும் இருந்திருக்க

வேண்டும் என்பதை உணர்த்துகிறது. எதற்கும் பயன்படாத

மேட்டுநிலங்கள், பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கு

கணபதி மேடு என்பதை எடுத்துக்காட்டாகக் காட்டலாம்.

நிலங்களும் பயிர்வகைகளும்

கூகையூர் கல்வெட்டுகளில் நிலங்கள் நஞ்சை-புஞ்சை, செய்தலை,

திடர், கொல்லை, மாவடை, மரவடை, குளவடை, ஏரியடை, சாரியடை

எனப் பல வகைகளில் குறிக்கப்பட்டுள்ளன. கோயில் மடப்பள்ளிகளுக்காக

விடப்பட்ட நிலம் திருமடைப் பள்ளிபுறம் என்று பெயர் பெற்றுள்ளது.

கோயிலுக்காகப் பூக்கள் விளைவிக்கப்பட்ட நிலம் திருநந்தவனம்


எனப்பட்டது. ஒரு நிலத்தின் பெயர் தரிசு என்று சொல்லப்படுவதைப்

பார்க்கின்ற போது இது நெசவுத் தொழில் செய்தவர்களுக்காக

கொடுக்கப்பட்ட விளைநிலமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நிலங்களின் பரப்பளவு வேலி என்ற அளவில் கணக்கிடப்பட்டுள்ளது.

இரண்டுக் கல்வெட்டுகளில், விதைக்கக் கூடிய தானியத்தின் அளவைக்

கொண்டு, இத்தனைக் கலம் அல்லது மரக்கால் விளையும் நிலம் என்று

(க.எண்.114) சுட்டப்பட்டுள்ளன. மேலும் சில கல்வெட்டுகளில் நிலத்தின்

அளவை குழியில் சொல்லப்பட்டுள்ளது. ரௌத்ரி வருடத்திய கல்வெட்டு,

1000 குழி, 400 குழி. 800 குழி என்று நஞ்சை நில அளவுகளைக்

குறிப்பிட்டுள்ளது (க.எண்.123). குழி என்பது ஒரு வழக்கில் உள்ள

கோலினால் அளக்கப்படும் ஒரு சதுரமாகும்.


சகவருடம் 1369-ஐச் சார்ந்தக் கல்வெட்டு, அவ்வூரில் நிலவிய 18 அடி

கோல் வைக்கப்பட்டு, 20 அடி கோல் வழக்கிற்கு கொண்டு வரப்பட்டதைக்

குறிப்பிடுகிறது. மேலும் இந்த 20 அடி அளவுகோல் அக்கல்வெட்டின் கீழ்ப்

பகுதியிலேயே கோட்டுருவமாக குறிக்கப்பட்டுள்ளது.

நிலங்களில் விளைந்தப் பயிர்களாக செங்கழுநீர் கரும்பு, கமுகு

மற்றும் வான்பயிர்கள் வீரபாண்டியன் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளன.

வரிவிதிப்பின் உச்சத்தைச் சொல்லும் கல்வெட்டில் கரும்பு பயிர்

விளைவிக்கவும், கரும்பு ஆலை அமைக்கவும் நாயக்க அதிகாரிகள்

கட்டாயப்படுத்தியதை உபத்திரமாகக் குறிக்கப்பட்டுள்ளது (க.எண்.196).

சகம் 1368-ஐச் சார்ந்த ஒரு கல்வெட்டில், அவ்வூரில் வாராப் பற்றாக

விதிக்கப்பட்ட வரி நெல் உள்ளூர் கொட்டாரத்தில் அளக்கப்பட வேண்டும்


என்று குறிக்கப்படுகிறது. கொட்டாரம் என்பது நெல் முதலிய

தானியங்களை சேகரித்து வைக்கும் களஞ்சியங்களான பெரிய வட்டமான

கட்டட அமைப்புகளாகும். உள்ளூர் கொட்டாரம் என்று தனிப்பட்டக்

குறிப்பால் நாயக்கர்களின் அரசு அல்லது சீர்மை கொட்டாரங்களும்,

நாட்டார்களுக்கு என்றும், கோயில்களுக்கென்றும், கொட்டாரங்கள்

இருந்திருக்க வேண்டும் என்றும் கருதத் தோன்றுகிறது. மானியமாகக்

கொடுக்கப்பட்ட கோயில் நிலங்கள் சிவன் கோயிலைச் சார்ந்ததாக

இருந்தால் அவற்றின் எல்லைகளை அறிய சூலக் கற்கள் நடப்பட்டன.

இம்முறை "சூலத்தாவனம் செய்தல்" என்று கல்வெட்டுகளில்

குறிக்கப்பட்டுள்ளன. திருமால் கோயிலுக்கு கொடுக்கப்படும் நிலங்களின்

எல்லைகளைக் காட்ட திருமாலின் ஆயுதமான சக்கரம் பொறிக்கப்பட்ட


கற்கள் எல்லைகளில் குறிக்கப்பட்டுள்ளன. இக்கற்களுக்கு "சக்கரக்கற்கள்"

என்றப் பெயர் விளங்கியதைக் கூகையூர் கல்வெட்டு ஒன்று காட்டுகிறது

(க.எண். 124).

நீர்ப்பாசன செய்திகள்

கூகையூர் வெள்ளாற்றின் வடகரையில் அமைந்த ஊராகும்.

கல்வெட்டுகளில் வெள்ளாறு என்று காணப்படவில்லை. நிலங்கள் "நிவா"

ஆற்றை ஒட்டி அமைந்த செய்தி இரண்டு கல்வெட்டுகளில் (க.எண் 94,102)

சொல்லப்படுவதைப் பார்க்கும் போது வெள்ளாற்றின் பெயரே “நிவா”

என்று கருதத் தோன்றுகிறது. இப்பகுதி நிலங்கள் ஆற்றுப்பாசனத்தைத்

தவிர, ஏரிப்பாசனத்திலும் இருந்தன. இவ்வூர் கல்வெட்டுகளில் சிற்றேரி,


புலவனூர் கலமத்து ஏரி, புல்லங்குளம் ஆகியவைக் குறிக்கப்பட்டுள்ளன.

மேலும் பகைத் தாங்கி என்ற ஒரு வகை நீர் நிலையும் சொல்லப்படுகிறது.

ஏந்தல்கள் பன்மையில் சில கல்வெட்டுகளில் சொல்லப்பட்டுள்ளன. ஒரு

கல்வெட்டில் இரவி கிணறு, நிலத்தின் எல்லையாகச் சொல்லப்பட்டுள்ளது.

இது பாசனக்கிணறாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது (க.எண்.121).

மேலும், கால்வாய்கள், வாய்க்கால்கள், கண்ணாறுகள் ஆகியவையும்

குறிக்கப்பட்டுள்ளன. ஆற்றுக்கால், ஊற்றுக்கால், தறிச்செய் வாய்க்கால்,

பெரியத்தும்பி வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும், நாவற் கண்ணாறு

ஆகியவையும் கல்வெட்டில் காணப்படும் பெயர்களாகும். ஒரு

கல்வெட்டில் தான்றிப்பள்ளம் குறிக்கப்பட்டுள்ளது. இது நீர்த் தேங்கும்

பள்ளமாக இருந்திருக்க வேண்டும்.


குலோத்துங்க சோழன் காலத்தில் பொன்பரப்பின ஈஸ்வரமுடையான்

கோயிலைக் கட்டிய கோவலராயன், மடப்பள்ளிபுரம் ஒன்றைக் கொடுத்து

அந்த நிலத்தின் கிழக்குப் பகுதியில் வீரபயங்கரம் என்ற ஏரியும் வெட்டியச்

செய்தி சொல்லப்பட்டுள்ளது (க.எண்.93)

கோயில் பணியில் தேவரடியார்களும் பிறரும்

கிருஷ்ண தேவராயரின் மகனான திருமலை தேவமகாராயரின், சகம்

1446-ஐச் சார்ந்த கல்வெட்டு “தேவர்கள் தம்பிரனார்க்கும்,

ஸ்ரீபஞ்சாட்சரநாதருக்கும் கோயில் பரிகளும், கைக்கோளர்களும்

தேவரடியாருக்கு தந்த "சிலாசாசனப் பட்டயம்" என்று குறித்துள்ளது.

கோயில் தெய்வங்களுக்கு ஆடைகளும், கோயில் திருவிழாவில்

ஏற்றப்படும் கொடி முதலியவற்றிற்கு துணியும், கோயில் சார்ந்த


பணியாளர்களுக்கு துணியும் நெய்து கொடுக்க நெசவாளர்கள்

கோயிலுக்கென்றே தனியாக இருந்தனர். நெசவாளர்கள் "கைக்கோளர்"

என்று பெயர் பெற்றனர். இவர்களுக்கு கோயில் சார்ந்த குடியிருப்பான

மடை நிலத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. (இன்றும் கோயில் அருகில்

நெசவாளர்கள் வீடுகளுக்கு பயன்படுத்தியக் குத்துக் கற்கள்

காணப்படுகின்றன).

இறைவனுக்கு நாள்தோறும் நிகழும் வழிபாட்டிலும், சிறப்பு

வழிபாடுகள் மற்றும் விழாக்காலங்களிலும் ஆடல் மகளிர்கள் நாட்டியமாடி,

தெய்வத்தின் புராணக்கதைகளையும், பாடல்களையும் ஆடிப்பாடி, பொது

மக்களின் மனதில் பதிய வைத்து, தெய்வீகப் பக்தியைப் பரப்பி வந்தனர்.

மேற்சொன்னக் கல்வெட்டில், கைக்கோளர்கள் முதன்மையானவர்களாக


கருதப்பட்டு, வண்ணவுடையான், நாகஇதிவன் என்று குறிப்பிடப்பட்டு,

கைக்கோளர்களுக்கு நிலங்கள் தரப்பட்ட செய்தி சுட்டப்பட்டுள்ளது. இதே

போல தேவரடியார்களுக்கும் நிலங்கள் தரப்பட்டுள்ளன. 14

தேவரடியார்களும் குறிப்பிடப்பட்டு அவர்களின் முறை வரிசையும்

சொல்லப்பட்டுள்ளது. முதல் முறை பொண்ணம்பலத்தி, இரண்டாம் முறை

நாச்சி, மூன்றாம் முறை பெரிய நாச்சி, நான்காம் முறை தேவி, ஐந்தாம்

முறை விளாத்தி, ஆறாம் முறை தேவன், ஏழாம் முறை காயச்சி, எட்டாம்

முறை தினாச்சி, ஒன்பதாம் முறை சிற்றம்பலத்தி, பத்தாம் முறை

தம்பிராட்டி, பதினொன்றாம் முறை கல்வி. பன்னிரண்டாம் முறை பெற்றி,

பதிமூன்றாம் முறை அலச்சி, பதினான்காம் முறை தித்தி என்று

இவர்களுடைய வரிசை சொல்லப்பட்டுள்ளது.


ஆவணங்கள் எழுதியோர் பற்றிய செய்திகள்

கோயில்களுக்காகக் கொடுக்கப்பட்ட கொடைகள் ஆலய

தர்மசாதனப்பட்டயம் என்று குறிக்கப்பட்டுள்ளன. அளவுகோல் மாற்றியது

தொடர்பான கல்வெட்டில், புதிய அளவுகோலால் அளக்கப்பட்ட

நிலக்குறிப்புகள் உலகில் பதியப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகு

என்பது நில அளவுகளையும், அதற்காக விதிக்கப்பட்ட வரிகளையும்

பதிந்து முறைப்படுத்தி எழுதப்படும் பதிவேடாகும். கூகையூர்

கல்வெட்டுகளில், ஆவணங்கள் எழுதியோராகவும், ஆவணங்களில்

கையொப்பம் இட்டவர்களாகவும் பலர் சொல்லப்பட்டிருக்கின்றனர்.

ஒம்படைக் கிளவிகள்
கல்வெட்டுகள் பொதுவாக கோயில்களுக்குக் கொடுக்கப்படும்

தர்மங்களைப் பற்றியவை. தர்மங்களைக் கொடுத்தவர்களும்,

இறையடியார்களும் அந்த தர்மங்கள் என்றென்றும் நிலைத்து நடக்க

வேண்டும் என்பதில் பொறுப்புக் கொண்டிருந்தனர். பண்டைய நாட்களில்

தர்மம் கொடுத்தல், அதனால் ஏற்படும் புண்ணியம், தர்மத்தைக் கெடுத்தல்,

அதனால் ஏற்படும் பாவம் ஆகியவையும், தர்மத்தைக் காப்பதில்

விருப்பத்தையும், கெடுப்பதில் அச்சத்தையும் ஏற்படுத்தியது. எனவே,

கல்வெட்டுகளின் இறுதியில் தர்மத்தைக் காப்பதால் ஏற்படும் நன்மையும்,

கெடுப்பதால் ஏற்படும் தீமையும் ஓம்படைக்கிளவிக்காகச் சொல்லப்பட்டன.

கூகையூர் கல்வெட்டுகள் சோழர்களின் இறுதியில் தொடங்கி விஜயநகரர்

கால இறுதிவரை தர்மங்களைப் பற்றி சொல்பவை. எனவே, இவற்றில்


பொதுவானக் குறிப்புகள் ஓம்படைகிளவிகளாகக் காணப்படுகின்றன.

தர்மங்கள் சூரியன், சந்திரன் உள்ளவரை நடத்தப்படவேண்டும் என்பதை,

'சந்திராதித்தவரை' என்ற சொற்களால் குறித்தனர். தர்மங்களைப் பொதுவாக

இறையடியார்கள் காக்க வேண்டும் என்பதை உணர்த்த, பன்மாஹேஷ்வரர்

ரக்ஷை" போன்ற சொற்களை கல்வெட்டின் இறுதியில் சேர்த்தனர். பண்டைய

நாளில் தரைமார்க்கமாக விலங்குகளால் இழுக்கப்பட்ட ஊர்திகளும்,

இடையேக் குறிக்கிடும் ஆறுகளைக் கடக்க பாலங்கள் இல்லாத நிலையில்

ஓடங்களுமே பயன்படுத்தப்பட்டன. எனினும், இறையடிகளார்கள் இந்தியா

முழுவதும் யாத்திரை மேற்கொண்டு பல ஆறுகளில் தீர்த்தமாடியும்,

தெய்வங்களை வணங்கியும் மகிழ்ந்தனர். இவ்வகையில் தமிழகத்தில்

இருந்து வெகுதொலைவில் உள்ள கங்கை மிகவும் புனிதமாகக்


கருதப்பட்டிருக்கிறது. ஓம்படைக்கிளவிகள் பலவற்றிலும் கங்கையின்

புனிதம் நிறைவாக சுட்டப்பட்டிருக்கிறது. கங்கைக் கரையில் 'கோ'தானம்

செய்வதும், பிராமணர்களுக்கு பலவகைத் தானங்கள் செய்வதும்,

அஸ்வமேத யாகம் செய்வதும், தந்தை, தாயாரைப் போற்றுவதும் மிகப்

புனிதமாகக் கருதப்பட்டிருக்கிறது. இவ்வளவு புனிதமுடைய கங்கை

ஆற்றின் கரையில் பசுக்களைக் கொல்வது, பிராமணர்களைக் கொல்வது,

தந்தை, தாயைக் கொல்வது ஆகியவை மிகப்பெரியப் பாவமாகக்

கருதப்பட்டது.

கங்கைக் கரையில் சுட்டப்பட்ட புண்ணியங்களும், பாவங்களும்

நன்கு விளங்குகின்றன. தர்மங்களுக்கு கெடுதல் பண்ணினவன் (அஹிதம்

பண்ணுதல்), தன் மாதா, பிதா, காராம் பசு(சென்நிரை பசு) ஆகியவற்றைக்


கொன்றவர்கள் ஆவார் என்று சொல்லப்பட்டுள்ளன. கொன்றப் பாவம்

தோஷம் என்றும், அப்பாவம், கோஹத்தி, அஷ்வஹத்தி என்றும்

குறிக்கப்பட்டது. தோஷம், பிரம்மஹத்தி தோஷம் என்றும் சில

கல்வெட்டுகளில் காணப்படுகின்றது. தர்மத்தைக் காத்தவர்கள் (அஹிதம்

பண்ணாதவர்கள்), (பரிபாலனம் பண்ணினவர்கள்) 1000 பிரம்மன், லிங்கம்

ஆகியவற்றை நிறுவியவர்கள் (பிரதிட்டை) என்றும் சொல்லப்பட்டன.

மூன்று கல்வெட்டுகளில் தர்மத்தைக் காப்பதாலும், அழிப்பதாலும்

ஏற்படும் பலன்கள் சமஸ்கிருத சுலோகமாக சொல்லப்பட்டிருக்கிறது.

கங்கைக் கரை பாவ புண்ணியம் தவிர வேறுவிதமாகவும் சில

ஓம்படைக்கிளவிகள் உள்ளன. குலோத்துங்க சோழன் காலக் கல்வெட்டு

(இது மாற்றுவான்) 'ஏழான் மூலழியும்', 'எழசம்' 'மறுவான்' என்று


சொல்கிறது. அதாவது ஏழுப்பிறப்புக்களுக்கும் குழந்தைப் பேறு இல்லாமல்

(சந்ததித் தொடர்ச்சி இல்லாமல் ) போவான் என்று அச்சமூட்டி எச்சரிக்கிறது.

ஜெய வருஷம் 1468-ஆம் ஆண்டைச் சார்ந்த கல்வெட்டு, "இந்தத்

தன்மத்துக்கு அஹிதம் பண்ணினவன் பெண்டோடு பிள்ளைத் தழுவாமல்"

என்று குறிப்பிடுகிறது. இதுவும் குழந்தைப் பேரில்லாமல் போவான்

என்பதையே குறிப்பதாகத் தெரிகிறது. சில கல்வெட்டுகள், இறுதியில்

சுபமஸ்து (நலம் நிலைக்கட்டும் ) என்று ஓம்படைக்கிளவி ஏதும்

குறிப்பிடாமல் உள்ளன. கூகையூர் கல்வெட்டுகளில், கோயிலுக்கானக்

கொடை குறிப்பிடாமல், நாயக்கர்களின் வரிவிதிப்பு சலுகைகளை

விளம்பரப்படுத்தும் கல்வெட்டுகளில், ஓம்படைக்கிளவிகள் ஏதும்


காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முற்றுப் பெறாதக்

கல்வெட்டுளில் ஓம்படைகிளவிகள் காணப்படவில்லை.

You might also like