Download as pdf or txt
Download as pdf or txt
You are on page 1of 1

எண்டிசையும் தமிழ் ழுழக்கம் செய்வோம்.

=========================
எண்சீர் விருத்தம்
(காய் காய் காய் தேமா (அரையடிக்கு))

செந்தமிழைச் சிறப்புடனே செப்பிடுவோம் நாளும்


.......செந்தமிழன் என்றதுமே செருக்குவந்து மூளும்!
சந்தமுடன் பாடிடவே சங்கமித்து நீளும்
........சான்றோரும் தந்தனரே சாய்ந்திடவோர் தோளும்!
சந்ததிகள் கற்றிடவே சாய்ந்திடாது மீ ளும்
........சரித்திரமாய் நின்றுலகின் சகலமுமே யாளும்!
சுந்தரமாய்த் தெள்ளுதமிழ் இலக்கியத்தில் நாளும்
........சுவைமிகுந்த மரபுகற்றுப் பணிந்திடுவோம் தாளும்!.

உலகினிலே மூத்தமொழி எம்மொழியே என்றே


.......உவப்புடனே சொல்லிடுவோம் உளம்மகிழ இன்று!
பலமொழிகள் வந்திங்கே பிறந்திடவே அன்று
.......பரிசாகத் தந்ததுவே சொல்வளத்தில் நின்று!
புலம்பெயர்ந்த தமிழருமே புகழ்சேர்க்கு மென்றே
.......போற்றியிதை வளர்த்தனரே புதுதேசம் சென்று!
நிலவெனவே யொளிதரவே நெடிதுயர்ந்த குன்றாய்
.......நீங்காது நிலைத்திடுமே நெஞ்சினிலே நின்று!

கண்ணெனவே போற்றியிதைக் கற்றறிந்து கொள்வோம்


........காலமெல்லாம் நிலைத்திடவே காப்பாற்றி வைப்போம்!
எண்ணத்தில் தோன்றுவதை எழுத்தாக்கும் போதும்
.......ஏட்டினிலே உள்ளவற்றை ஏறெடுத்துப் பார்ப்போம்!
விண்ணுலவும் முகிலெனவே விரியுலகம் எல்லாம்
........வித்தாரக் கவிகொண்டு வியத்திடவே செய்வோம்!
எண்டிசையும் தமிழ்முழக்கம் செய்திடுவோம் நாளும்
.........எழுச்சியுடன் நின்றதனை ஏழுலகும் சேர்ப்போம்!.

கோவை லிங்கா.

You might also like